உலக மசாலா: தினமும் 24 கி.மீ. தூரம் நடக்கும் 76 வயது முதியவர்

By செய்திப்பிரிவு

சீ

னாவின் குவாங்ஷி பகுதியில் வசிக்கிறார் 76 வயது ஷி யுயிங். இந்த வயதான காலத்தில் கடந்த 4 ஆண்டுகளாகத் தினமும் சுமார் 24 கி.மீ. தூரம் நடந்து செல்கிறார்! ஷியின் 9 வயது பேரன் ஜியாங் ஹாவோயெனுக்கு 2 வயதில் பெருமூளை வாத நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 4 வயதானபோது பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். அம்மா வேறு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். அன்று முதல் அப்பாவின் அம்மாவான ஷிதான் ஜியாங்கைக் கவனித்து வருகிறார். மகனின் மருத்துவச் செலவு அதிகம் என்பதால், இவனின் அப்பா வெளியூரில் பல வேலைகளைச் செய்து சம்பாதித்துக் கொடுக்கிறார்.

“குழந்தை நோயால் பாதிக்கப்பட்டாலும் மிகவும் புத்திசாலி. ரொம்ப அன்பானவன். தினமும் மூலிகை மருந்துகளை வைத்து, இவனது கால்களுக்கு மசாஜ் செய்வேன். ஆரோக்கியமான உணவுகளைச் செய்து கொடுப்பேன். அவனை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். இனி வாழ்நாளில் நடக்க முடியாது என்று சொன்ன கால்களை நான் மருந்துகளாலும் என்னுடைய மசாஜாலும் ஓரளவு குணப்படுத்தியிருக்கிறேன். இப்போது ஜியாங்கால் எழுந்து நிற்க முடியும். எதையாவது பிடித்துக்கொண்டு சற்றுத் தூரம் நடக்கவும் முடியும்.

இது மற்றவர்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அவனைப் பொருத்தவரை இது மிகப் பெரிய முன்னேற்றம். எனக்குப் பிறகு அவனை, அவனேதானே பார்த்துக்கொள்ள வேண்டும்? இந்தப் புத்திசாலிக் குழந்தையை வீட்டோடு முடக்கி வைக்க எனக்கு மனம் இல்லை. அதனால் பள்ளியில் சேர்த்தேன். எங்கள் வீட்டிலிருந்து 2.8 கி.மீ. தூரத்தில் இருக்கிறது பள்ளி. வாகன வசதி வைத்துக்கொள்ள எங்களிடம் பணம் இல்லை. அத்துடன் இவனை யாரும் அக்கறையாகப் பார்த்துக்கொள்ளவும் முடியாது. அதனால் தினமும் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு நடக்கிறேன். காலை பள்ளியில் விட்டுவிட்டு வருவேன். மதிய இடைவேளைக்குப் போய் அழைச்சிட்டு வருவேன். வீட்டில் சாப்பிட வைத்து, சற்று நேரம் ஓய்வெடுக்க வைத்து மீண்டும் பள்ளியில் சென்றுவிடுவேன். மீண்டும் மாலை சென்று அழைத்து வருவேன். ஒருநாளைக்கு 8 தடவை இப்படி நடக்கிறேன்.

மற்றவர்கள் இதைப் பெரிய விஷயமாகச் சொன்னாலும் எனக்கு இதில் ஒரு கஷ்டமும் இல்லை. ஓடியாடக்கூடிய வயதில் ஒரு குழந்தை இப்படிப் பாதிக்கப்பட்டிருப்பதைவிட என் கஷ்டம் ஒன்றும் பெரிதில்லை. என்னுடைய விடாமுயற்சியால் நிச்சயம் ஒருநாள் ஜியாங் மற்றவர்களைப் போல எழுந்து நடப்பான் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு செல்கிறேன்” என்கிறார் ஷி யுயிங்.

பாட்டியின் முயற்சியால் ஜியாங் உடலில் முன்னேற்றம் தெரிந்தாலும் சாதாரணமானவர்களைப் போல் அவனால் மாற இயலாது. கணிதத்தில் அதிக ஈடுபாடு கொண்டவனுக்குப் பெருமூளை வாதத்தால் பேனாவைக் கூடப் பிடிக்க முடிவதில்லை. இவனது மருத்துவச் செலவுகளுக்குக் கடன் வாங்கினாலும், எப்படியாவது நல்ல கல்வியைக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷி யுயிங்.

பாட்டியின் அன்புக்கும் அர்ப்பணிப்புக்கும் ஏதாவது மேஜிக் நிகழட்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்