36,000 அடி உயரத்தில் விமான ஊழியர்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நடத்தி வைத்த திருமணம்: நெகிழ்ச்சியில் தம்பதி

By செய்திப்பிரிவு

சிலி நாட்டில், 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, போப் ஆண்டவர் ஆசியுடன் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. போப் ஆண்டவர் பயணித்த விமானத்தில் திருமணம் நடப்பது இதுதான் முதல்முறையாகும்.

சுற்றுப்பயணம்

தென் அமெரிக்க கண்டத்தில் சிலி நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் சான்டியாகோ நகரில் இருந்து வடபகுதியில் இருக்கும் ஐகியூகியூ நகருக்கு  லதாம் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் 321 என்ற விமானத்தில் நேற்று பயணித்தார். 

இந்த விமானத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், விமானத்தின் தலைவர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பயணம் செய்தனர். விமானம் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.  அப்போது, அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி போப் ஆண்டவர் பிரான்சிஸிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

திருமணம்

மணமகன் கார்லோஸ் சியுபார்டி(வயது 41), மணமகள் வுலா போடெஸ்ட்(வயது 39) ஆகியோரின் வேண்டுகோளை ஏற்ற போப் ஆண்டவர் அவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.

இந்த திருமணம் குறித்து மணமகன் கார்லோஸ் சியுபார்டி நிருபர்களிடம் கூறுகையில், '' நாங்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதியே திருமணம் செய்துவிட்டோம். அப்போது,  சிலி நாட்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால், தேவாலயம் சிதலமடைந்தது. ஆதலால், அங்கு திருமணம் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கவில்லை. ஆதலால், இப்போது உங்கள் முன் திருமணம் செய்ய விரும்புகிறோம் என போப் ஆண்டவரிடம் தெரிவித்தோம்.

சம்மதம்

அதற்கு அவர், 'நான் செய்து வைக்கிறேன்' என்றார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று போப் எங்களிடம் கேட்டார். 'ஆம்' எனத் தெரிவித்தோம். எங்கள் இருவருக்கும் மிகச் சுருக்கமாக திருமண சடங்குகளை போப் ஆண்டவர் பிரான்சிஸ் செய்து வைத்தார். லதாம் ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைவர் இக்னேஷியோ கியூடோ எங்கள் திருமணத்தின் சாட்சியாக இருந்தார்.

அதன்பின் எங்களுக்கு, போப் ஆண்டவர் பிரான்சிஸ் கையொப்பம் இட்ட, கையால் எழுதப்பட்ட திருமணச் சான்றிதழ் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் தலைமையில், விமானத்தில் நடந்த இந்த திருமணம் விலை மதிப்பில்லாதது.

எங்களின் திருமணம் உண்மையில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் போப் ஆண்டவர் பிரான்சிஸ் விமானத்தில் யாருக்கும் திருமணம் செய்து வைத்தது இல்லை.

மினி ஹனிமூன்

எங்களுக்கு முறைப்படி திருமணம் இப்போதுதான் நடந்துள்ளது என்கிற போதிலும், தற்போது 6 வயதிலும், 3 வயதிலும் இரு குழந்தைகள் உள்ளனர். விரைவில் 'மினி ஹனி மூன்' செல்ல திட்டமிட்டுள்ளோம்'' கார்லோஸ் சியுபார்டி தெரிவித்தார்.

இந்த திருமணம் குறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் கிரேக் புருக் கூறுகையில், ''இங்கு நடந்த திருமணம் செல்லுபடியாகும். அனைத்தும் அதிகாரப்பூர்வமானது. திருமணச் சான்றிதழும், புகைப்படமும் அனுப்பி வைக்கப்படும்'' என்றார்.

போப் ஆண்டவர் சொன்ன அறிவுரை

புதுமணத் தம்பதியினருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறிய அறிவுரையும் கூறியுள்ளார். அதில் ''திருமணத்தன்று கையில் அணிவிக்கப்படும் மோதிரம் மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. ஏனென்றால் அது உங்களுக்கு எரிச்சலைஉண்டாக்கும். அதேசமயம், விரலைக் காட்டிலும் மோதிரம் சிறிது பெரிதாக இருந்தால், எளிதாக விரலில் இருந்து கழன்றுவிடும். ஆதலால், கவனமாக இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்