18 மாதங்களாக நீடித்த இழுபறிக்கு பிறகு ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பிரிட்டிஷ் பிரதமர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் கூட்டாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சுமார் 18 மாதங்களாக நீடித்த இழுபறிக்குப் பிறகு பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து கடந்த 2016 ஜூனில் அந்த நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரெக்ஸிட் என்றழைக்கப்படும் இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து வரும் 2019 மார்ச் 29-ம் தேதி ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் பல்வேறு விவகாரங்களால் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உட்பட 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் விசா இன்றி எந்த நாட்டுக்கும் சென்று குடியேறலாம். அதன்படி பிரிட்டனில் சுமார் 30 லட்சம் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களும், இதர ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 லட்சம் பிரிட்டிஷ் குடிமக்களும் வசித்து வருகின்றனர். ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகிய பிறகு இவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டிஷ் அரசுக்கு இடையே 18 மாதங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

மேலும் பிரிட்டனின் ஒரு பகுதியான வடக்கு அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான அயர்லாந்து இடையேயான கடல் பகுதியை இரு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன. பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு குறிப்பிட்ட கடல் பகுதியை பிரிட்டன் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என்பதால் அதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனிடையே அயர்லாந்து கடல் எல்லை விவகாரத்தில் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த ஐனநாயக ஐக்கிய கட்சிக்கும் பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. ஐனநாயக ஐக்கிய கட்சியின் ஆதரவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருவதால் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மேவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாட்டை எட்டினர்.

இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் சென்றார். அங்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தொடர்ந்து அங்கேயே வாழலாம் என்றும், வடக்கு அயர்லாந்து- அயர்லாந்து கடல் எல்லை விவகாரத்தில் கடுமையான எல்லை கோட்பாடுகளை பின்பற்ற மாட்டோம் என்றும் பிரதமர் தெரசா மே உறுதியளித்தார்.

இதன்பின் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கர் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் பல்வேறு விவகாரங்களில் விட்டுக் கொடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

மேலும்