ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி ஏற்பட்ட நிலையில் இடைக்கால அரசு அமைக்க முயற்சி: இடைக்கால அரசு அமைக்க தீவிர முயற்சி

By செய்திப்பிரிவு

ஜிம்பாப்வே ஆட்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், இடைக்கால அரசு அமைப்பது குறித்து சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஜிம்பாப்வேக்கு 1980-ல் சுதந்திரம் கிடைத்தது. அதன் பிறகு அந்நாட்டை ராபர்ட் முகாபே (93) தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வா அடுத்த அதிபராவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்கும் நோக்கத்தில் எம்மர்சனை முகாபே பதவி நீக்கம் செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில்தான், அந்நாட்டு ராணுவம் தலைநகர் ஹராரேவை நேற்று முன்தினம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், அரசு தொலைக்காட்சி ஆகியவை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. முகாபே ஹராரேவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதன்மூலம் ராணுவ ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை மறுத்த ராணுவம், அதிபருடன் இருந்து கொண்டு குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சகஜநிலை திரும்பும் என்றும் தெரிவித்திருந்தது.

இதனிடையே, கத்தோலிக்க மதகுருவான பிடலிஸ் முகோனோரி, ராபர்ட் முகாபே மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே சமரசம் செய்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தையின் விவரம் தெரியவில்லை. அதேநேரம், முகாபேவை பதவி விலகுமாறு ராணுவம் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதை முகாபே ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஹராரே நகரில் உள்ள ‘புளூ ஹவுஸ்’ இல்லத்தில் முகாபே, அவரது மனைவி கிரேஸ் மற்றும் 2 மூத்த அமைச்சர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, வெளிநாட்டில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் வங்கிரை நாடு திரும்பி உள்ளார். இதையடுத்து, எதிர்க்கட்சியை உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைப்பது குறித்து ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மோர்கன் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்