வடகொரியாவில் அணு ஆயுத சோதனை முயற்சியின்போது சுரங்கம் உடைந்து 200 பேர் பலி

By செய்திப்பிரிவு

வடகொரியாவில் அணு ஆயுத சோதனை முயற்சி நடந்தபோது சுரங்கம் உடைந்து 200 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபரில் வடகொரியா முதல்முறையாக அணு ஆயுத சோதனையை நடத்தியது. அதன்பின் 2009, 2013, 2016 ஜனவரி, செப்டம்பரில் அடுத்தடுத்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. இதைத் தொடர்ந்து, 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வடகொரியா நடத்தியது. அதன்பிறகும் அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் வடகொரிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜப்பானிய தொலைக்காட்சி சேனல் ஒன்று நேற்று ஒளிபரப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது:

வடகொரியா- சீன எல்லைப்பகுதியில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வடகொரிய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அங்குள்ள மேன்டப் மலைப் பகுதியில் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 10-ம் தேதி சுரங்கம் உடைந்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்க மேலும் 100 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களும் மண்ணில் புதைந்துள்ளனர்.

சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக வடகொரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அணு ஆயுத சோதனை முயற்சியின்போதே சுரங்கம் உடைந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

இதன் காரணமாக அந்த மலைப் பகுதியில் கதிர் வீச்சு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக அண்டைநாடான சீனாவுக்கு கதிர் வீச்சு அபாயம் அதிகம் உள்ளது. மேன்டாப் மலையில் 6 இடங்களில் அணு ஆயுத சோதனை மையங்களை வடகொரியா அமைத்துள்ளது. அங்கு அணு ஆயுத சோதனை நடைபெறும் போதெல்லாம் அந்தப் பகுதியில் சுமார் 6.3 ரிக்டர் அலகில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் ஏற்படுகின்றன. பெருமளவில் நிலச் சரிவு ஏற்படுகிறது.

வடகொரியா அண்மையில் நடத்திய ஹைட்ரஜன் குண்டு 120 கிலோ டன் கொண்டதாகும். இந்த குண்டு கடந்த 1945-ல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் பயன்படுத்திய அணு குண்டை விட 8 மடங்கு பெரியதாகும். இதனால் மேன்டாப் மலைப் பகுதியே சிதைந்துள்ளது. இனிமேலும் அங்கு அணு ஆயுத சோதனை நடத்துவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டில் வடகொரிய அதிபராக கிம் ஜோங் உன் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இருப்பினும் அணு ஆயுத திட்டத்தை கைவிட வடகொரியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்