உலக மசாலா: புதுமையான தேவாலயம்!

By செய்திப்பிரிவு

எப்படியோ காதலர்கள் மீண்டு வந்தால் சரி!

வியட்நாமில் உள்ள ‘ஓல்ட் ஃப்ளேம்ஸ்’ சந்தையில் காதலில் தோல்வியடைந்தவர்கள், தங்களின் காதல் பரிசுகளை விற்பனை செய்துவிடுகிறார்கள்! காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், கிடார், துணிகள், வாசனைத் திரவியம், மெழுகுவர்த்தி, பணப்பை, புத்தகங்கள் என்று ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இன்றைய இளைஞர்களும் இளம் பெண்களும் தோல்வியடைந்த காதலின் வலியைச் சுமந்துகொண்டு இருக்க விரும்புவதில்லை. வலியிலிருந்து விரைவில் விடுபடவே விரும்புகிறார்கள். அதனால் உண்மையை ஏற்றுக்கொண்டு, தங்களிடமிருக்கும் பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிடுகிறார்கள். இதன்மூலம் அவர்கள் அந்தத் துன்பத்திலிருந்து வெளிவந்துவிடுகிறார்கள். “என் காதல் உடைந்தபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். என்னால் சாப்பிடவோ, எதுவும் குடிக்கவோ முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு துன்பத்திலிருந்து வெளிவர முடிவெடுத்தேன். துணிகள், பணப்பைகள், பற்பசை என்று அனைத்தையும் விற்றுவிட்டேன். இப்போது பாரம் குறைந்துவிட்டது” என்கிறார் 29 வயது பு தை. பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கிறது. “போன தலைமுறை வரை பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்கள்தான் அதிகம். இன்றைய இளைஞர்கள் 30 வயது வரை சுதந்திரமாக இருந்துவிட்டு, பிறகே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். காதல் தோல்வியடைந்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டுவிட நினைக்கிறார்கள். ” என்கிறார் இந்தச் சந்தையை ஆரம்பித்த டின் தாங்.

 

புதுமையான தேவாலயம்!

தேவனைப் பிரார்த்தித்தபடி தெய்வீக பானத்தைப் பருகுங்கள்’ என்ற கோட்பாட்டின்படி இயங்கிவருகிறது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு தேவாலயம். ஜோஹன்னஸ்பர்கில் இயங்கும் கபோலா தேவாலயம், பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவதோடு, மது பானங்களையும் அளித்து வருகிறது. ஆப்பிரிக்காவில் இதுபோன்று வித்தியாசமான தேவாலயங்கள் பல இயங்கி வருகின்றன. டிசெய்ட்சி மகிடி என்ற பிஷப் இந்தத் தேவாலயத்தை உருவாக்கியிருக்கிறார். “பொதுவாகத் தேவாலயங்களில் மதுபானங்களை அனுமதிப்பதில்லை. மனிதன் மகிழ்ச்சியாகக் கடவுளை வணங்குவதில் என்ன தவறு? இந்தத் தேவாலயம், பிரார்த்தனை செய்துகொண்டே மது அருந்துவதற்குப் பாதுகாப்பான இடமாக இருக்கிறது. ஆரம்பித்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் 500 பேர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் குறிப்பிட்ட நபர்களைத் தேர்வு செய்து, தென்னாப்பிரிக்கா முழுவதும் இதுபோன்ற தேவாலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். பியர், விஸ்கி என்று விதவிதமான மதுபானங்கள் இங்கே இருக்கின்றன. பிரார்த்தனைக்கு முன்பு மதுபானங்களை வழங்குகிறோம். தேவன் எங்களுடன் இருப்பதால் எல்லோர் மனதிலும் அன்பும் மரியாதையும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பகுதியில் குற்றச் செயல்கள் குறைந்திருக்கின்றன. தற்போது ஆண்களுக்கான தேவாலயமாக இது இருக்கிறது. எதிர்காலத்தில் பெண்களையும் அனுமதிக்கும் எண்ணம் இருக்கிறது ” என்கிறார் மகிடி.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

விளையாட்டு

51 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்