ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி: அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு வீட்டுக்காவல்

By செய்திப்பிரிவு

ஜிம்பாப்வேவில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் தம் கைக்குள் கொண்டுவந்துள்ளது அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முகாபேயின் 37 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே கடந்த 1980-ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. இதையடுத்து, 1980 முதல் 1987 வரையில் ராபர்ட் முகாபே (93) பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 1987 முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். உலகிலேயே மிகவும் வயதான ஆட்சியாளராகவும் இவர் விளங்குகிறார்.

இந்நிலையில், அதிகாலையில் தலைநகர் ஹராரேவை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள சாலைகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே ராணுவ டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு தொலைக்காட்சியையும் (இசட்பிசி) ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அதிபர் முகாபேவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா கூறும்போது, “முகாபேவுடன் தொலைபேசியில் பேசினேன். தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் நலமாக இருப்பதாகவும் முகாபே தெரிவித்தார்” என்றார்.

அதேநேரம் தலைநகரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் வழக்கம் போல இயங்குவதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் வங்கி ஏடிஎம்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்துச் சென்றனர்.

ராணுவப் புரட்சி அல்ல

ஆனால் இது ராணுவப் புரட்சி இல்லை என ராணுவம் மறுத்துள்ளது. இதுகுறித்து, ராணுவ மேஜர் ஜெனரல் சிபுசிசோ மோயோ தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, “அரசை ராணுவம் கைப்பற்றவில்லை. அதிபருடன் இருந்து கொண்டு குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளனர். எங்கள் நோக்கம் நிறைவேறியதும் நிலைமை பழைய நிலைக்கு திரும்பிவிடும்” என்றார்.

இதனிடையே, ஹராரேவில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்பட்டது. மேலும் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டன் தூதரகமும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துணை அதிபர் நீக்கம்

சமீபத்தில் துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வாவை முகாபே பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து, முகாபே மனைவி கிரேஸ் (52) அடுத்த அதிபராவதற்கான வாய்ப்பு பிரகாசமானது. இதற்கு ராணுவ தளபதி ஜெனரல் கான்ஸ்டன்டினோ சிவெங்கா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஆளும் கட்சியினர் சிவெங்காவை விமர்சனம் செய்திருந்தநிலையில் ராணுவ புரட்சி நடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

56 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

வணிகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்