எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்

By செய்திப்பிரிவு

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. எட்டு வயது சிறுமி பாடினாள். போட்டியின் நடுவர், “இன்னும் சற்றுபயிற்சி செய்துவிட்டு, பிறகு வந்து கலந்து கொள்” என்று அந்த குழந்தையின் மனம் புண்படாத வகையில் கூறி அவளை நிராகரித்தார். தாம் நிராகரிக்கப்பட்டுவிட்டோமே என்ற வருத்தம், அப்போது அந்த குழந்தையின் முகத்தில் தெரியவில்லை. ஆனால், அந்தக் குழந்தையின் தாயின் முகத்தை குளோஸ் அப்-பில் காண்பித்தபோது, அவர், தனது கண்களில் வடிந்த நீரைத் துடைத்தவாறு அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் அந்தக் குழந்தையும் அழத் தொடங்கியது.

இந்த தாயின் செயலில் பாசம் ஏதுமில்லை. பாசமுள்ள தாய் எனில், நிராகரிப்பை அல்லது ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை சிரித்துக் கொண்டே அழகாய் வெளிப்படுத்தி, தன் குழந்தைக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் இருந்திருக்க வேண்டும். ஆம்! எந்த செயலையும் வார்த்தை வடிவில், குழந்தைகளிடம் சொல்லிப் புரிய வைப்பதைவிட, செயல் மூலம் புரிய வைப்பதே, குழந்தையின் மனதில் நன்கு பதியும். அதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாகத் திகழ வேண்டியது அவசியமாகும்.

கழைக் கூத்தாடிக் குடும்பம் ஒன்று மழைக்காக ஒதுங்கி நின்றது. மழையில் நனைந்து, சிரித்தபடி ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். அந்த சந்தோஷம் பற்றி அவர்களிடம் கேட்டபோது, “நேத்து நடந்ததை பத்தி எந்த சிந்தனையும் எங்களுக்கு இல்லைங்க. அதேபோல், நாளைக்கு என்னநடுக்குமோ என்ற கவலையும் எங்களுக்கு இல்லைங்க, இந்த நிமிஷம் என்ன நடக்குதோ, அதை சந்தோஷமா ஏத்துகிட்டு அனுபவிப்போமுங்க, இதுதாங்க எங்க வாழ்க்கை, இப்போ இந்த நிமிஷம், இந்த மழையை ரசிச்சி, சந்தோஷமா, ஆடிப்பாடிகிட்டு இருக்கோமுங்க” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதால்தான் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. ஏமாற்றம் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணமே எதிர்பார்ப்புதான். நாம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் போது அது கிடைக்காவிடில் நமக்கு ஏற்படும் ஏமாற்றத்தால், மன அழுத்தம், இயலாமை, தோல்வி மனப்பான்மை, வருத்தம் ஆகிய எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. ஏமாற்றத்தைப் பற்றி, ஒருவர் தொடர்ந்து, மிக அதிக அளவில் சிந்திக்கும்போதுதான், அவருக்குள் தற்கொலை எண்ணமோ அல்லது ஏமாற்றியவரைப் பழிவாங்கும் எண்ணமோ உண்டாகிறது.

மகிழ்ச்சிக்கு என்ன வழி? - அதனால், எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். முன்னர் நடந்ததையும், பின்னர் நடக்கப் போவதையும் பற்றி யோசிக்காமல், இந்த நொடியில் மட்டுமே வாழப் பழக வேண்டும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியா? நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால்தானே, நம்மால் அதை சாதிக்க முடியும். எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். ஆனால், எதிர்பார்த்தபடி நடக்காத போது, மாற்று வழியில் நமது இலக்கினை மாற்றிக் கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். டாக்டர் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாவிடில், இன்ஜினீயர் ஆவதற்கு முயற்சிக்கலாம் அல்லவா? அதைவிடுத்து டாக்டர் ஆக முடியாமல் போனதற்காக தற்கொலை செய்து கொள்வதுதான் தவறு. இதற்குக் காரணம் அதீத எதிர்பார்ப்பும், அதனால் ஏற்பட்ட ஏமாற்றமும்தானே.

எனவே, எதிர்பார்ப்பு, ஏமாற்றமாக மாறாமல் இருக்க வேண்டுமெனில், நிறைவேறா எண்ணத்தை மடைமாற்ற கற்றுத்தர வேண்டும். ஒன்று இல்லாவிட்டால், வேறொன்றை சிந்திக்கும் பழக்கத்தை சிறு வயதிலேயே உருவாக்க வேண்டும். எதை இழந்தாலும், மன உறுதியை மட்டும் எப்போதும் இழக்கக் கூடாது என்பதை சிறு வயதிலேயே கற்றுத் தர வேண்டும். ஒன்றை நினைத்து, அதை அடைவது மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கும் மனப்போக்கை மாற்ற வேண்டும். அதற்கு முதலில், பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்ப்பைக் குறைத்து, ஏமாற் றத்தை ஏற்று வாழும் மனநிலையைப் பெற முயற்சிக்க வேண்டும். - கட்டுரையாளர்: தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்காலிமேடு, காஞ்சிபுரம் மாவட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

53 mins ago

க்ரைம்

57 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்