வேலைக்கான போட்டித் தேர்வுக்கு பயனளிக்கும் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி: மாணவர்களை அழைத்து செல்வதை வழக்கமாக்குவோம்

By சோ.இராமு

நூலகம், புத்தகக் கண்காட்சி, அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, பொருட்காட்சி, மரபு வழி நடைப்பயணம், கோளரங்கம், ஆராய்ச்சி நிலையம், தொல்லியல் மேற்புற களஆய்வு, அகழ் வைப்பகம், களப்பயணம், பண்ணை தங்கல், சுற்றுலா...ஆகியன பாடங்களுடன் தொடர்புடைய இடங்களாகும். இவற்றுடன் மாணவர்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி உள்ளது. இது சார்ந்த விழிப்புணர்வுடன், கண்காட்சி நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் சென்றால் பொது அறிவு போட்டி, விநாடி-வினா, போட்டித் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

அரசின் நல திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு ஒன்றியங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், உழைக்கும் மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர்... என பலதரப்பட்டோரின் நலனுக்காக மாநில அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து அதுசார்ந்து பல நூறு கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டுகிறது.

ஒவ்வொரு திட்டமும் யாருக்காக? இதில் பயனாளிகள் யார் யார்? பயன்பெற தகுதி உடையவர்கள் யார்? என்பது குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.அரசு இது சார்ந்து தொலைக்காட்சி,செய்தித்தாள், சமூக வலைதளங்களில், ஒலிபெருக்கி, துண்டு பிரசுரங்கள் வாயிலாக விளம்பரம் செய்து வந்தபோதிலும் செய்தி மக்களை சென்றடையாமல் உள்ளது. திட்டத்தின் பயனாளிகள் தகவல் தெரியாததால் விழிப்புணர்வின்றி இருந்து விடுகிறார்கள். மாணவர்களின் வீடுகளில் அல்லது அவர்கள் வசிக்கும் தெருக்களில் பயனாளிகள் இருக்கலாம், திட்டங்களை மாணவர்கள் தெரிந்து கொண்டால் அவர்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அருகில் உள்ளவர்களுக்கும் தகவல்களை தெரிவித்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஒரு பாலமாகலாம்.

யாருக்காக அரசு திட்டம் தீட்டியுள்ளதோ அது சார்ந்தவர்கள் பயன்பெற்றால்தான் திட்டத்தின் நோக்கம் முழுமையடையும். அரசின் நோக்கமும் வெற்றி பெறும். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இல்லம்தேடி கல்வி, மகளிர் உரிமைத்தொகை, வாசிப்பு இயக்கம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், இலவச காப்பீடு, மானியங்கள், சலுகைகள், தள்ளுபடிகள், அரசு பள்ளிதொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், உள்கட்டமைப்பு வசதி... இப்படியாக நல்ல பல திட்டங்களின் பட்டியல் நீள்கிறது.

கண்காட்சியும் பொது அறிவும்: மாநிலத்தின் வளர்ச்சிக்காக, அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்காக அரசு கொண்டுவரும் திட்டங்கள் சார்ந்து வேலைக்கான போட்டித் தேர்வுகளில் இதுசார்ந்த கேள்விகள் கட்டாயம் இடம்பெறும்.எனவே, மாநில அரசு ஒவ்வொரு திட்டத்தையும் யாருக்காக கொண்டுவந்துள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து விழிப்படைய வேண்டும். மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரவும், பல்வேறு பிரிவுகளில் அவர்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காக பாட புத்தகம்,பள்ளி வளாகத்தை தாண்டி ஆசிரியர்கள் பல்வேறு இடங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்கிறார்கள். இனிவரும் காலங்களில் மாணவர்களை அழைத்துச் செல்லும் இடங்களில் ஒன்றாக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியும் இடம்பெற்றால் அது மாணவர்கள் மனங்களை கொள்ளையடிக்கும்.

- கட்டுரையாளர், ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சித்தையன்கோட்டை, ஆத்தூர் ஒன்றியம். திண்டுக்கல் மாவட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

1 min ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

31 mins ago

வாழ்வியல்

51 mins ago

ஓடிடி களம்

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

40 mins ago

மேலும்