வடக்கு அகன்றும் தெற்கே குறுகியும் இந்தியாவின் நிலப் பரப்பு அமைந்துள்ளது. இதை கவனிச்சு இருக்கீங்களா? ஆமாம். இதனாலதானே தெற்கு முனையில் இருந்து மத்திய இந்தியா வரைக்கும், ஏறத்தாழ ஆங்கில ‘V' வடிவை நம்மால காண முடியுது. கூடவே, இன்னொரு கேள்வி இந்த ‘V' வடிவத்துக்கு வெளியே, என்ன பார்க்கறீங்க?
இந்தியாவுக்கு இயற்கை தந்த கொடை. அதாவது கிழக்கிலும் மேற்கிலும் உள்ள மிக நீளமான கடற்கரை. கிழக்கே வங்கக் கடலில் அந்தமான், மேற்கே அரபிக்கடலில் லட்சத்தீவு உட்பட, இந்திய கடற்கரை, மொத்தமாக சுமார் 7,500 கி.மீ. நீண்டது.
கங்கை நதியின் கிளை ஆறு ஹுக்ளி. கொல்கத்தா மாநகர் வழியாக சென்று வங்கக் கடலில் இந்த நதி கலக்கிறது. இந்தப் புள்ளியில் தொடங்கி தெற்கே குமரி முனைவரை சுமார் 1500 கி. மீ. நீளம் கொண்டது கிழக்கு கடற்கரை. ஆங்காங்கே ஓரிரு இடங்கள் தவிர்த்து, பெரும்பாலும் கற்கள், பாறைகள் இல்லாத சமநிலப் பகுதியாக இருக்கிற கிழக்குக் கடற்கரையை ஒட்டி, நகரங்கள், விளை நிலங்கள், காடுகள் என்று பல்வகை நில அமைப்புகள் உள்ளன.
கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒன்று ஒடிசா. மகாநதி படுகையால் பலன் பெற்றாலும், அனேகமாக ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ‘ஹிராகுட்' அணைக்கட்டு, கடுமையான வெள்ளத்தில் இருந்து ஓரளவு காப்பாற்றுகிறது. கால்வாய் பாசனம் மிகுந்த இப்பகுதியில், நெல் மிக முக்கிய பயிராகும். மொத்த விளை நிலத்தில் 75%-க்கு மேல், நெல் விளைவிக்கப்படுகிறது. கோதாவரி, கிருஷ்ணா நதிகளால் பயன்பெறும் ஆந்திரா, கிழக்கு கடற்கரை ஒட்டி உள்ள, மழை வளம் நிறைந்த வளமான வேளாண் மாநிலம்.
நெய்தல் போற்றும் தமிழ் இலக்கியம்: இதனைத் தொடர்ந்து வருகிறது தமிழ்நாடு. சென்னை துறைமுகம், வேளாண்மைக்குப் புகழ்பெற்ற காவிரி டெல்டா, தூத்துக்குடி துறைமுகம், கடற்கரை ஒட்டி உள்ள உப்பளங்கள், செழிப்பான மீன்வளம், சங்க காலம் தொட்டு வளர்ந்து வருகிற கடல் வணிகம், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மெரினா கடற்கரை. தமிழகப் பொருளாதாரத்தில் ‘கிழக்கு கடற்கரை', மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
‘கடலும் கடல் சார்ந்த இடமும்' தமிழ் இலக்கிய, பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மேற்கு தொடர்ச்சி மலையைப் போன்று, இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இல்லை. ஆனாலும், இரும்புத் தாது, மைக்கா, மெக்னீசியம் உள்ளிட்ட தாது வளங்கள் இங்கே நிரம்பிக் கிடக்கின்றன.
இந்திய துணைக் கண்டத்தின் மிகப் பழமை வாய்ந்த கடினப் பாறைகளைக் கொண்டது தக்காண பீடபூமி. ‘காம்ப்ரியன்' காலத்துக்கு முற்பட்ட, சுமார் ஐந்து கோடி முதல் இருபது கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கணக்கிடப்படுகிறது. இங்குள்ள விந்திய சாத்புரா மலைகள், நமது நாட்டின் வடக்கு தெற்கு மண்டலங்களுக்கு இடையிலான கற்பனை பகுப்புக் கோடாகப் பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் ‘விந்திய மலைக்குத் தெற்கே' என்று தென் மாநிலங்களை, பொதுவாக அடையாளம் காட்டுகிற வழக்கம் தோன்றியது எனலாம்.
| இந்த வாரக் கேள்வி: தமிழகத்தில் கொண்டாடப்படும் ‘கடற்கரைத் திருவிழாக்கள்' என்னென்ன? |
(வளரும்) - கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி, தொடர்புக்க: bbhaaskaran@gmail.com