இந்தியா முழுவதும் பைக் ரைட் செல்வதென ஆரம்பித்து நாம் முதலில் சென்றது முர்டேஷ்வர். கர்நாடக மாநிலத்தில் அரபிக் கடலோரம் உள்ள ரம்மியமான ஒரு இடம் முர்டேஷ்வர். மிகப்பெரிய சிவன் சிலை, பிரம்மாண்டமான ராஜகோபுரம், கடற்கரையில் மழையில் நனைந்தது என ஒரு நாள் முழுவதும் முர்டேஷ்வரில் சுற்றி வந்தோம்.
பயணக் களைப்பெல்லாம் பறந்தோட, அடுத்த இடம் நோக்கி பயணத் திட்டத்தைத் துரிதப்படுத்தினோம். அடைமழை வெளுத்து வாங்கிய மறுநாள் காலை, ரெயின்கோட் சகிதம் தயாராகி கோவாவை நோக்கி கிளம்பினோம்.
நமது பயணத் திட்டத்தை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தோம். முர்டேஷ்வரில் இருந்து கிளம்புகிறோம் என்றதும், நமது இன்ஸ்டா நண்பர் ஒருவர் அழைத்து அப்சரகொண்டா அருவி குறித்து தெரியப்படுத்தினார். ஆர்வம் தொற்றிக் கொண்டது.
கோவா செல்லும் வழியில், ஹைவேஸில் இருந்து ஐந்து கிலோமீட்டர் பயணித்தால் அந்த அழகான அருவி வந்துவிடும். கர்நாடகா எப்போதும் இயற்கையின் பேரதிசயங்களை நிறைய ஒளித்து வைத்திருக்கும். அப்படி ஒரு அடடா இடம் தான் இந்த அப்சரகொண்டா அருவி.
வானத்திலிருந்து தொப்பென... தூரத்தில் கடலின் பேரிரைச்சல்... கொட்டும் மழையில் செங்குத்தான படிக்கட்டுகளில் இறங்கி அருவி நோக்கி நடந்தோம். எப்போதுமே ஒரு இடத்திலிருந்து புறப்படும்போது, காலையிலேயே புறப்பட்டுவிடுவோம். அப்போதுதான், வாகன நெரிசல் இல்லாமல் பயணம் செல்ல முடியும்.
அன்றும் அப்படித்தான், காலையிலேயே புறப்பட்டதால், அருவிக்கு சீக்கிரம் வந்துவிட்டோம். நாங்கள் வந்தபோது, நான்கு ஐந்து இளைஞர்கள் குளித்துவிட்டு மேலே ஏறி வந்தார்கள். அதனால், அருவியில் சிலர் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு தான் அருவியை நோக்கி நடந்து சென்றோம்.
ஆர்ப்பரித்துச் செல்லும் அருவியின் சத்தம் நன்றாக கேட்க, அந்த மழையில் மனம் ஜில் என்று ஆனது. சுற்றிலும் மரங்கள். வானத்திலிருந்து நீர் தொப்பென கொட்டுவது போல் அழகாக சின்னதாக பேரிரைச்சலோடு விழுந்து கொண்டிருந்தது அருவி. சின்ன அருவிதான் என்றாலும், அதன் வேகம் ரொம்பவும் அதிகமாக இருந்தது. கீழே ஓடும் நீருக்கு மேலே, எதிர் எதிர் மரங்களில் ஊஞ்சல் ஒன்று கட்டப்பட்டிருந்தது.
அதற்கு மத்தியில் பார்க்கவே அவ்வளவு ரம்மியமாக இருந்தது. எங்களைத் தவிர வேறு யாருமே இல்லாத நிமிடம், வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருப்பது போன்று ஒரு உணர்வு. மனம் குழந்தையைப் போல குதூகலத்தில், கொண்டாட்டத்தில் இருந்தது. இயற்கையின் ஒட்டுமொத்த அழகும் கொட்டிக்கிடந்த இடமாக இருந்தது அப்சரகொண்டா அருவி.
அடுத்து எங்கே?: அருவியில் இறங்கிக் குளிக்கலாம் என்றால், மழை விட்டபாடில்லை. நேரம் செல்ல செல்ல அருவியில் நீர்வரத்து அதிகமாகிக் கொண்டே போனது. அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, ரொம்ப நேரம்அந்த அருவியையே பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் முர்டேஸ்வர் சென்றால், மறக்காமல் இந்த அப்சரகொண்டா அருவிக்கும் சென்று வாருங்கள்.
ரொம்ப நேரம் அருவியையே பார்த்துக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. அடுத்து வெகு தூரம் பயணித்து ‘கோவா' செல்ல வேண்டும். கோவா என்றதும் எல்லோருக்கும் சில விஷயங்கள் மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால், அதுமட்டுமல்ல கோவா.
எந்த வயதினரும் ஒரு முறையேனும் சுற்றிப்பார்க்கூடிய இடமாக கோவா கண்டிப்பாக இருக்கும். இயற்கை ஆசீர்வதிக்கப்பட்ட இடங்கள் கோவாவில் ஏராளம் இருக்கின்றன. இனிகொஞ்ச நாட்கள் கோவாவில்தான். தயாராகிக் கொள்ளுங்கள் இயற்கையை ரசிக்க.
- கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ்ப் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com