இருளர் இன மாணவர்களுக்குக் கல்வி வழிகாட்டியாகத் திகழும் இளைஞர்கள்

By பெ.பாரதி

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இருளர் இன மாணவ, மாணவிகளின் படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், அம்மாணவர்களுக்குக் கல்வி வழிகாட்டியாக 'ஸ்வீட் டிரஸ்ட் பாய்ஸ்' அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பேருதவி செய்து வருகின்றனர்.

அரியலூர் அடுத்த நெரிஞ்சிக்கோரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (45). கல்லூரி விரிவுரையாளரான இவர், 'ஸ்வீட் டிரஸ்ட் பாய்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், சாலையோரங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான பனை விதைகள், 2 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை இதுவரை நட்டு வைத்துள்ளார். இவருடன், கல்லூரி பயிலும் இளைஞர்கள், வேலையில் உள்ளோர் என 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைகோத்து இப்பணிகளைக் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வருகின்றனர்.

அதேபோல், கரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை காலகட்டங்களில் சென்னை 'எண்ணங்களின் சங்கமம்' அமைப்புடன் சேர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உணவு, மளிகைப் பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளனர். மேலும், குடிசையில் வாழும் மக்களுக்கு மழைக் காலங்களில் குடிசையின் மீது விரித்துக்கொள்ளும் வகையில், தார்பாய்கள், தனிமையில் வாழும் முதியோருக்குத் தேவையான உணவு, ஆண்டுக்கு இருமுறை மருத்துவ முகாம் எனப் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படாததால், இருளர் இனக் குழந்தைகளின் படிப்பு பாதியில் தடைப்படாமல் இருக்க அந்த இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் 'மகாத்மா காந்தி மாலை நேரப் படிப்பகம்' என்ற மையத்தைத் தொடங்கி, மாணவ, மாணவிகளுக்குக் கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிமடம் அருகேயுள்ள ஓலையூர் கிராமத்தில் முதலில் தொடங்கிய இந்த மகாத்மா காந்தி மாலை நேரப் படிப்பகத்தைத் தற்போது பாப்பாங்குளம் கிராமத்திலும் கடந்த வாரம் தொடங்கியுள்ளனர்.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் அனைத்து மாணவர்களும் மாலை நேரத்தில் நடத்தப்படும் வகுப்பில் பங்கேற்றுக் கல்வி பயிலலாம். இந்தப் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு டேப்லெட், நோட்டு, பேனா, புத்தகம் உள்ளிட்ட பொருட்களும், வாரத்தில் இருநாள் கொண்டக்கடலை மற்றும் சத்தான உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.

பயிற்சி வழங்க அதே பகுதியில் உள்ள பட்டதாரிகளை நியமித்துள்ளனர். மேலும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சிலரின் உதவியுடன் அங்கிருந்தே ஆன்லைன் வகுப்புகளையும் மாணவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். தற்போது கிராமத்தில் உள்ள மரத்தடி மற்றும் அரசுப் பள்ளி வளாகங்களைப் பயிற்சி வகுப்புகளுக்குப் பயன்படுத்தி வரும் இவர்கள், விரைவில் பயிற்சி வகுப்புக்கான கொட்டகை அமைக்க அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

"இங்கு பயிலும் மாணவர்கள், கல்லூரியில் சேர்ந்த பின்பும் அவர்களுக்குக் கட்டணம், புத்தகம் உள்ளிட்ட உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். பின்தங்கியுள்ள இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும். அவர்களின் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்களின் படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது என்ற குறிக்கோளோடு எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது" என்று அமைப்பை வழிநடத்திச் செல்லும் இளவரசன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்