உயர்கல்வியின் தரம் குறைந்ததா?- தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி கல்லூரிகளின் இடம் சரிவு

By செய்திப்பிரிவு

தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி கல்லூரிகளின் இடம் சரிந்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பான என்ஐஆர்எப் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் செயல்பாடுகளை மதிப்பிட்டு 2016-ம் ஆண்டு முதல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் இந்த ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி கல்லூரிகளில் பெரும்பாலானவை இடம் சரிந்துள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் கூறியதாவது:

ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் இந்தியா வில் உள்ள 100 சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் 43.10 மதிப் பெண் பெற்று 87-வதுஇடத்தை பிடித்துள்ளது. பல்கலைக்கழக பிரிவில் நாட்டின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் 44.36 மதிப்பெண்ணுடன் 58-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் 74.44 புள்ளிகளுடன் 13-வது இடத்தை பிடித்தது.

மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் யூனியன் பிரதேசத்தின் 9 மருத்துவக் கல்லூரிகளில் ஜிப்மர் 67.42 மதிப்பெண்களுடன் 8-வது இடத்தில் உள்ளது. புதுச்சேரியின் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 46.08 புள்ளிகளுடன் 45-வது இடத்தை பெற்றுள்ளது.

யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 18 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் எந்த கல்லூரியும் நாட்டின் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்தாண்டு புதுச்சேரி பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை ஒரே மதிப்பெண்ணுடன் (35.66) 144-வது இடத்தை பிடித்துள்ளன. 2016-ல் புதுச்சேரி பொறியியல் கல்லூரி 58.79 மதிப்பெண்களுடன் 49-வது இடத்தை பிடித்தது.

புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி இந்த தரவரிசை போட்டியில் கலந்து கொள்ளவே இல்லை. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பிரிவில் யூனியன் பிரதேசத்தின் 20 கல்லூரிகளில் காஞ்சி மாமுனிவர் முதுகலை படிப்பு மையம் மட்டுமே 55.01 மதிப்பெண்களை பெற்று 50-வது இடத்தை பெற்றுள்ளது. பழமை வாய்ந்த தாகூர் கலைக்கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் 33 கல்லூரிகள் நாட்டின் 100 சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரியில் பல் மருத்துவம், மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பிரிவில் உள்ள எந்த நிறுவனமும் இந்த ஆண்டு தரவரிசை பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. இந்த ஆண்டின் புதுச்சேரி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலானது புதுச்சேரி உயர்கல்வியின் குறைவான தரத்தை எடுத்துக் காட்டுகிறது. அதனால் உயர் கல்விக்கான மாநில கவுன்சிலை புதுச்சேரி அரசு உடனே அமைப்பது அவசியம்.

குறிப்பாக காஞ்சி மாமுனிவர் முதுகலை பட்டப்படிப்பு மையத்தை மாநில பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தலாம். யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகிய மேல்நிலை கழகங்களில் இருந்து யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நிரந்தர அந்தஸ்து பெற்றுத்தருதல், நான்கு பிராந்தியங்களிலும் சமுதாயக் கல்லூரிகளை நிறுவுதல் ஆகியவை உயர்கல்வியின் கட்டமைப்பை மாற்றி பல மாற்றங்களை கொண்டுவர உதவும் திறமையான ஆசிரியர்களை நியமிப்பது அவசியம். அரசு தரமான கல்வி மாற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும். தரம் குறைந்த நிறுவனங்களில் பொதுப் பணத்தை முதலீடு செய்வது வீண் முயற்சி என்பதை அரசாங்கம் விரைவாக உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காஞ்சி மாமுனிவர் தரவரிசையில் முன்னேற்றம்

காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராயச்சி நிறுவனத்தின் இயக்குநர் செல்வராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 50-வது இடம் கிடைத்துள்ளது பெருமைக்குரிய நல்வாய்ப்பு. கடந்தாண்டு 56-வது இடத்தில் இருந்தோம். இம்முறை 50-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்