கற்றல் குறைபாட்டை சரிசெய்ய மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

ஆன்லைன் கற்பித்தலில் நிலவும்கற்றல் குறைபாட்டைச் சரிசெய்ய,மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் (அசைன்மென்ட்) வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.அதனுடன் மாணவர்களின் சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் உள்ளிட்டசெயலிகள் வழியாக ஆசிரியர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆன்லைன் கற்பித்தலால் நிலவும் கற்றல் குறைபாட்டை சரிசெய்ய, மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் (அசைன்மென்ட்) வழங்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கை:

தமிழகத்தில் சில பகுதிகளில் மாணவர்கள் கற்றலில் இடைவெளி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, கற்றல், கற்பித்தல் பணிகளில் சீரான தன்மையை உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியம். அதனால் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(எஸ்சிஇஆர்டி) மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் வீட்டுப்பாடம் (அசைன்மென்ட்) வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வீட்டுப்பாடம் வழங்க வேண்டும். 1 முதல்5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் படம் வரைதல், வாழ்த்து அட்டை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை வழங்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 2 வீட்டுப்பாடங்கள் மாதந்தோறும் வழங்கப்படும்.

அதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்ற செயல்பாடுகளும், 9, 10-ம் வகுப்புகளுக்கு புத்தக விமர்சனம் உள்ளிட்ட பணிகளும் தரப்பட வேண்டும். இதற்கான மாதிரி அசைன்மென்ட் குறிப்புகள் எஸ்சிஇஆர்டி மூலம் தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் மாதந்தோறும் அனுப்பப்படும்.

பள்ளிக்கல்வித் துறையில் இருந்து வழங்கப்படும் அசைன்மென்ட்களையே மாணவர்களுக்கு பள்ளிகள் தர வேண்டும். மேலும், மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுப்பாடங்கள் தரும்போது,அவற்றை ஒரேநேரத்தில் செய்துமுடிக்க வற்புறுத்தக் கூடாது.

மாணவர்களின் கற்றல் பின்னடைவை ஆசிரியர்கள் ஆராய்ந்து, அவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்த விவகாரம் சார்ந்துஅனைத்து தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

49 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்