மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க அலைமோதும் பெற்றோர்: கடந்த ஆண்டைவிட மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் அதன் நிர்வாகத்தின் கீழ் 26 தொடக்கப் பள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலைப் பள்ளிகள், 15 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாநகராட்சிப் பள்ளிகளில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக வகுப்பறை, ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும், தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால், பெற்றோர் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினர். அதனால், கடந்த ஆண்டு 30 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.

தொடர்ந்து இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் அரசு 75 சதவீதக் கல்வி கட்டணம் நிர்ணயித்து அதனை வசூல் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், கரோனா பாதிப்பால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வேலையிழந்துள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு 10 முதல் 50 சதவீதம் ஊதியக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெறும் ஆன்லைன் வகுப்பிற்கு 75 சதவீதக் கல்வி கட்டணம் செலுத்த வேண்டுமா? என்ற ஆதங்கமும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. அதனால், நகர்ப்புறங்களில் வசிக்கும் பெற்றோர், தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் மேலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ''மாநகராட்சிப் பள்ளிகளில் தற்போது கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரோபாட்டிக் ஆய்வகங்கள், நவீன விளையாட்டு மைதானங்கள், ஜேஇஇ மற்றும் நீட் பயிற்சிக்குத் தனி வகுப்புகள், நவீனக் கழிப்பறை வசதிகள், சுகாதாரமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால், கரோனாவால் மட்டுமே மாணவர் சேர்க்கை அதிகரித்ததாகக் கூறிவிட முடியாது. மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்களுடைய கற்பித்தல் மேம்பாடு, மாணவர்கள் பெறும் கூடுதல் மதிப்பெண்கள் போன்றவையே பெற்றோரை தற்போது மாநகராட்சிப் பள்ளிகளை நோக்கித் திருப்பியுள்ளது.

2021 கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் 2,355 மாணவர்களும், 4,336 மாணவிகளும் சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் 3,533 மாணவர்களும், 7,366 மாணவிகளும் சேர்த்துள்ளனர். மொத்தம் கடந்த ஆண்டு 17,590 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மொத்த மாணவ, மாணவிகளின் சேர்க்கை 19,774 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் வழிக் கல்வியில் 2,417 மாணவர்களும், 4,363 மாணவிகளும், ஆங்கில வழிக் கல்வியில் 4,612 மாணவர்களும், 8,383 மாணவிகளும் சேர்ந்துள்ளனர். ஏற்கெனவே 2019-2020 ஆம் கல்வி ஆண்டை விட 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இந்த 2021-2022 ஆம் கல்வி ஆண்டில், கடந்த 2020-2021 ஆம் கல்வி ஆண்டை விட மேலும் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்