கணினி- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளை வழங்கத் திட்டம்: திருச்சி ஐஐஐடி இயக்குநர் தகவல்

By ஜெ.ஞானசேகர்

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளையும், குறுகிய கால சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாக இயக்குநர் என்.வி.எஸ்.என்.சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாகத்துக்கு, ரூ.128 கோடியில் திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டி கிராமத்தில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கல்வி நிலையத்தின் 3-வது பட்டமளிப்பு விழா ஜூலை 31-ம் தேதி இணையவழியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, புதிய கல்லூரி வளாகத்தில் இயக்குநர் சர்மா, இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாகத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவில் கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering) மற்றும் மின்னணு- தகவல் தொடர்பு பொறியியல் (Electronics and Communication Engineering) ஆகிய துறைகள் உள்ளன. இவை மட்டுமின்றி பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன.

ஜூலை 31-ம் தேதி இணையவழியில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கணினி அறிவியல் பொறியியல் துறையில் 25 பேரும், மின்னணு- தகவல் தொடர்பு பொறியியல் துறையில் 21 பேரும் பட்டம் பெறவுள்ளனர். இதில், கணினி அறிவியல் பொறியியல் துறை மாணவர் திலகர் ராஜா, மின்னணு- தகவல் தொடர்பு பொறியியல் துறை மாணவர் கந்ரெகுல லலித் பனி சீனிவாஸ் ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் பெறுகின்றனர். திலகர் ராஜா, குடியரசுத் தலைவர் தங்கப் பதக்கத்தையும் பெற உள்ளார்.

பட்டமளிப்பு விழாவுக்குத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், கல்லூரியின் ஆளுநர் குழுவின் தலைவருமான இறையன்பு தலைமை வகிக்கிறார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், ஆக்சிலர் வென்ச்சர்ஸ் நிறுவனர்- தலைவருமான சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.

ரூ.128 கோடி செலவில் கல்லூரிக்குச் சொந்தக் கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து கல்லூரி முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்.

கல்லூரியில் இணையவழிச் சான்றிதழ் பயிற்சி, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளைத் தொடங்கத் திட்டமிட்டு வருகிறோம்.

கல்லூரியில் தற்போதுள்ள 2 இளநிலைப் பாடப் பிரிவுகளில் தற்போது தலா 30 ஆக உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைத் தலா 60 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட 16 பேராசிரியர் பணியிடங்களில் தற்போது 13 பேர் பணியில் உள்ளனர். மேலும், தேவைக்கேற்ப 11 பேரைப் பணி நியமனம் செய்ய ஆளுநர் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப இவர்கள் பணியமர்த்தப்படுவர். சிறந்த கல்வி நிலையங்களில் சிறந்த முறையில் பிஎச்டி முடித்தவர்களை மட்டுமே பணியமர்த்தி வருகிறோம்’’.

இவ்வாறு இயக்குநர் சர்மா தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது பதிவாளர் ஜி.சீதாராமன், துணைப் பதிவாளர் பிஜூ மேத்யூ, பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளர் வி.சிந்து ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

உலகம்

19 mins ago

வணிகம்

36 mins ago

சினிமா

58 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்