வானில் தெரிந்த சூரிய ஒளிவட்டம்: என்ன காரணம்?

By செய்திப்பிரிவு

சூரியனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் உடுமலை பகுதிகளில் இன்று தெரிந்தது. இதைப் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் உற்றுநோக்கினர்.

இந்த ஒளிவட்டம் ஹாலோஸ் என்று அழைக்கப்படுகின்ற ஒரு வெள்ளை வளையமாக சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றி காணப்படுகிறது. சில நேரங்களில் ஒரு வானவில்லாகவும் காணப்படுகிறது. இது முக்கியமாக சூரியனுடன் நடக்கிறது.

வானத்தில் இருக்கும் மெல்லிய, மிக உயரமான சிரஸ் மேகங்கள் பெரும்பாலும் பனிப் படிகங்களால் ஆனவை. இவை சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும். அந்த மேகங்களுக்குள் இடைநிறுத்தப்பட்ட பனித்துகள்கள் வழியாகச் சூரிய ஒளி செல்லும்போது ஒளிவிலகல், பிரதிபலிப்பு மற்றும் ஒளிச்சிதறல் ஆகியவற்றால் சூரிய ஒளிவட்டம் ஏற்படுகிறது. இந்த அறுங்கோண வடிவ பனிப்படிகங்கள் வழியாக சூரிய ஒளி செல்லும்போது அது 22 டிகிரி கோணத்தில் வளைந்து சூரியனைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உருவாக்குகிறது.

இதன் முழு வட்டப் பரிமாணம் 44 டிகிரி அளவில் இருந்தாலும், அவ்வட்டத்தின் ஆர அளவைக் கொண்டு உலகம் முழுவதும் இது 22 டிகிரி ஒளி வட்டம் என அழைக்கப்படுகிறது. இதை சன் ஹேலோ என்று அழைக்கிறோம். ஹாலோஸை ஏற்படுத்தும் பனிக்கட்டிகள் குளிர்ந்த காலநிலையில் மிதக்கின்றன. பொதுவாகக் காற்றில் மிகுந்த ஈரப்பதம் இருக்கும்போது இதுபோலச் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றுவது வழக்கம்.

ஒளிவிலகலுக்கு எடுத்துக்காட்டாக

ஒரு முப்பட்டகத்தின் வழியே வெண்மை ஒளியைச் செலுத்தும்போது ஏழு வண்ணங்களாகப் பிரிகலடையும். அதைப் போலவே மழைத்துளிகளில் சூரிய ஒளி விழும்போது வானவில்லின் வண்ணங்களை நாம் வானத்தில் காண்கிறோம். வானவில் ஒரு பகுதி வட்டம் அல்லது வளைவாகக் காணப்படுகிறது.

சந்திரனில் இது போல ஏற்படுமா?

இதுபோன்ற ஒளிவட்டம் நிலா வெளிச்சத்திலும் ஏற்படும். ஆனால் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஒளிவட்டம் சரியாகத் தெரியாது. அந்த ஒளி வட்டத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நிலவொளி மிகவும் பிரகாசமாக இல்லாததால், சந்திர ஒளிவட்டங்கள் பெரும்பாலும் நிறமற்றதாக இருக்கும்.

சூரிய ஒளிவட்டத்தின் உட்புறம் அதிக சிவப்பு மற்றும் ஒளிவட்டத்தின் வெளிப்புறத்தில் அதிக நீல நிறத்தை நீங்கள் கவனிக்கலாம். இந்த நிறங்கள் சூரியனைச் சுற்றியுள்ள ஹாலோஸில் மிகவும் குறிப்பிடத்தக்கவை. சூரியக் கதிர்களில் உள்ள சிவப்பு வண்ணம் சற்றுக் குறைவாக ஒளி விலகல் அடையும். அப்போது நீல வண்ணம் சற்று அதிகமாக ஒளி விலகல் அடைகிறது. எனவே இவ்வகை ஒளிவட்டங்களில் உட்புறம் சிவப்பு நிறமும், வெளிப்புறம் நீலவண்ணமாகவும் காணப்படும். அதேபோல உள் விளிம்பு கூர்மையாகவும் வெளிப்புற விளிம்பு பரவலாகவும் இருக்கும்.

மேலும், ஒளிவட்டம் தோன்றும்போது வானம், மற்ற நேரத்தைவிட இருண்டதாக இருப்பதைக் கவனியுங்கள். இதுபோன்ற நிகழ்வை நாம் நேரடியாகப் பார்த்து ரசிக்கலாம். ஆனால் வெறும் கண்களால் நீண்ட நேரம் சூரியனைப் பார்க்கக் கூடாது என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

-கண்ணபிரான்,

ஒருங்கிணைப்பாளர்,

கலிலியோ அறிவியல் கழகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்