ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு: ஆன்லைன் வகுப்புகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி வாரியங்களைச் சார்ந்த (Education Boards) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும்.

அண்மையில் சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் மீது மாணவி ஒருவர் பாலியல் புகாரை எழுப்பியிருந்தார். வகுப்பில் அவர் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைக்கும் அளவுக்குச் சென்றதாகவும், இதுகுறித்து துறைத்தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும், ஆன்லைன் வகுப்புகளின்போதும் எல்லை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மேலும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனியாகக் குழு அமைக்கவும், ஆன்லைன் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவும் வேண்டுமெனத் தமிழக அரசுக்குப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்தும் ஆன்லைன் வகுப்புகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

'' * தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி வாரியங்களைச் சார்ந்த (Education Boards) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும்.

* மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்பப் பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

* ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கும். அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடித் தொலைபேசி (Hot Line) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.

* மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்தவகையான புகாரையும் உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் (Central Complaint Centre- CCC) தெரியப்படுத்தவேண்டும்.

* இந்த மையம் புகார்களைப் பதிவுசெய்வது மட்டுமின்றி, அது சார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும். இம்மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர். இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் ரகசியத் தன்மையுடன் பாதுகாக்கப்படும்.

* பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ (POCSO) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழுப்புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வுக் கட்டகம் (orientation module) பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.

* பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுய தணிக்கை (Self-audit) செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறையால் கட்டகம் (Module) உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.

* இணையவழிக் கற்றல்- கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக உடை அணிய வேண்டும்.

* இணையவழிக் கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு, அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்யவேண்டும்.

* புகார் மற்றும் மாணவர்களின் கருத்துகளை எளிதாகத் தெரிவிப்பதற்காகப் பள்ளி வளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் (Safety Boxes) வைக்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.

* மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, பள்ளியில் பெறப்பட்ட அனைத்து புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும். புகாரானது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும் (வாய்மொழி உட்பட) இந்தப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.

* அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை 'குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம்' என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்’’.

இவ்வாறு அந்த நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்