தரையில் அமர்ந்து 55 நாட்களாகப் பணிபுரியும் புதுவை அரசுக் கல்லூரி முதல்வர்: கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை; ஆளுநரிடம் புகார்

By செ. ஞானபிரகாஷ்

கல்லூரியை மேம்படுத்த விடுத்த கோரிக்கைகளைப் பல ஆண்டுகளாக உயர் கல்வித்துறை கண்டுகொள்ளாததால் புதுச்சேரியில் அரசுக் கல்லூரி முதல்வர் 55 நாட்களாகத் தரையில் அமர்ந்து பணிபுரிந்து வருகிறார். அவரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நானும் தரையில் அமர்ந்து பணிபுரிவேன் என்று துணைநிலை ஆளுநரிடம் உதவிப் பேராசிரியர் மனு தந்துள்ளார்.

புதுச்சேரியில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு முதல்வராக டாக்டர் சசிகாந்த தாஸ் உள்ளார். இவர் கல்லூரிக்குத் தேவையான கட்டமைப்பு வசதி, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உயர் கல்வித்துறையிடம் வேண்டுகோள் விடுத்தார். இதை உயர் கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஜனவரி 20-ம் தேதி முதல் கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து டாக்டர் சசிகாந்த தாஸ் பணிபுரிந்து வருகிறார்.

முதல்வர் டாக்டர் சசிகாந்த தாஸ்

இந்நிலையில் இதுபற்றி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் சம்பத் குமார் மனு தந்துள்ளார்.

இது தொடர்பாக 'இந்து தமிழ்' இணையதளத்திடம் அவர் கூறியதாவது:

"புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளில் மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ள மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப 30 வகுப்பறைகள், இருக்கைகள், கணிணி ஆய்வகம், கலையரங்கம், விளையாட்டு வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மனநல ஆலோசகரைப் பணியமர்த்த வேண்டும். கல்லூரி பராமரிப்புப் பணித் தொகையை உயர்த்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் பணி உயர்வு மற்றும் ஊதிய நிலுவைகளைத் தர வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைக் கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் உயர் கல்வித்துறைக்குக் கோரிக்கை விடுத்தார். ஆனால், நடவடிக்கையே எடுக்கவில்லை.

இதனால் கடந்த 20.1.2021 முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து கல்லூரி முதல்வர், தனது அலுவலகப் பணிகளைச் செய்கிறார். அறவழியில் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதில் கல்லூரிப் பேராசிரியர்களும் பங்கேற்றனர். 55 நாட்கள் ஆகியும் இதுவரை கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. பேராசிரியர்களும் பணிகளைச் செய்கிறோம். போராட்டத்தில் இதுவரை ஈடுபடவில்லை. ஆனால், முதல்வரின் கோரிக்கைகளை புதுச்சேரி உயர் கல்வித்துறை இதுவரை பரிசீலிக்கவில்லை.

உதவிப் பேராசிரியர் சம்பத் குமார்

கல்லூரியின் தலைமைப் பொறுப்பில் உள்ள முதல்வர் தரையில் அமர்ந்து தனது பணிகளைச் செய்கிறார். அவரது வழிகாட்டுதலின்படி பணியாற்றும் பேராசிரியர்களான நாங்கள், நாற்காலியில் அமர்ந்து பணி செய்வது முறையில்லை. முதல்வரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை ஆளுநர் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். கோரிக்கை நிறைவேறும்வரை முதல்வரைப் பின்பற்றி எனது பணிகளையும் தரையில் அமர்ந்தே செய்ய முடிவு செய்துள்ளேன்."

இவ்வாறு உதவிப் பேராசிரியர் சம்பத் குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

ஜோதிடம்

7 mins ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்