2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு எழுதினர்: வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

By செய்திப்பிரிவு

கரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட குரூப்-1 தேர்வு 8 மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் துணை ஆட்சியர் (ஆர்டிஓ), உதவி ஆணையர் உள்ளிட்ட உயர் பதவிகளில் 66 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஏப்.5-ம் தேதி நடக்க இருந்தது. கரோனா ஊரடங்கால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தள்ளிவைக்கப்பட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 856 மையங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுதினர். சென்னை மாநகரில் மட்டும் 150 மையங்களில் 46 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

தேர்வர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை டிஎன்பிஎஸ்சி விதித்திருந்தது. அதன்படி, தேர்வுகாலை 10 மணிக்கு தொடங்கினால்கூட, தேர்வர்கள் 9.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தாமதத்தால் அவதி

தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் சில நிமிடங்கள் தாமதமாக வந்த தேர்வர்கள் பலர், தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சிலர் கூறியதாவது:

வழக்கமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், குரூப்-1 தேர்வுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், கரோனா காரணமாக பேருந்து, ரயில் பயண நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளி மாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து சரியானநேரத்துக்கு வந்துசேர முடியவில்லை. சில இடங்களில் மழைபெய்ததாலும் உரிய நேரத்துக்கு மையத்தை அடைய முடியவில்லை. அதிகபட்சம் 9.30 மணிவரைகூட தேர்வர்களுக்கு அனுமதி வழங்கி இருக்கலாம். இதனால் எங்களின் பல மாத உழைப்பு வீணாகிவிட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருக்குறள், பெண்ணியம்

குரூப்-1 தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாகவும், சில கேள்விகளுக்கு மட்டும் விடை வாய்ப்புகளில் 2 சரியான பதில்கள் இடம்பெற்றதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.

வழக்கத்தைவிட இந்த முறை வினாத்தாளில் திருக்குறள், பெண்ணியம், நீதிக்கட்சி, திராவிட இயக்க சிந்தனைகள், அதன் தலைவர்கள் குறித்த கேள்விகள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. இதன்மூலம் வெளிமாநில மாணவர்கள் எளிதாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வினாத்தாளில் 2018-ம் ஆண்டில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்த கேள்வியும் இடம்பெற்றிருந்தது. இந்த திரைப்படம் சாதிய கட்டமைப்பின் கொடியவிளைவுகளை சுட்டிக் காட்டுகிறது எனவும், படம் பெற்ற விருது மற்றும் இயக்குநர் பெயர் குறித்த விவரம் கேட்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் இருந்து ஒருபணியிடத்துக்கு 50 பேர் வீதம்அடுத்தகட்ட பிரதானத் தேர்வுக்கு3,300 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

8 mins ago

சினிமா

18 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்