புதுச்சேரியில் புதிதாகத் தனியார் பல்கலைக்கழகம்: அதிமுக, இந்திய மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் அரசின் சட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிமுக, இந்திய மாணவர் சங்கம் ஆகியவை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

புதுவையில் மத்திய அரசின் முழு நிதி உதவியோடு செயல்படக்கூடிய ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகம், நோய்க் கடத்தி ஆராய்ச்சி நிறுவனம், தேசியத் தொழிற்கல்வி நிறுவனம் மற்றும் மாநில அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உட்பட்ட புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, விவசாய அறிவியல் கல்லூரி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் கடந்த 2015-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் தனியார் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்காக அரசாணை வெளியிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களின் லாபத்திற்காக மேற்கொள்ளப்படுவதாக இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்த அரசு ஆணை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் அரசு தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அமைச்சரவையில் முடிவு எடுத்து சட்ட முன்வரைவை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பியது. அதற்குக் கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார். இதையடுத்து இக்கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் விண்ணரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு தங்கள் சுய லாபத்திற்காகத் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி வழங்கி உள்ளது இந்த சட்ட வரைவுக்குத் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னஞ்சிறு மாநிலமான புதுவையில் ஏற்கனவே ஒரு மத்திய பல்கலைக்கழகமும், பல தேசியக் கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலப் பல்கலைக்கழகங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க புதுச்சேரி காங்கிரஸ் அரசு அவசரகதியில் முயற்சித்து வருகிறது. இது எதிர்காலத்தில் பணம் இருந்தால் மட்டுமே கல்வி என்ற சூழலுக்கு இட்டுச்செல்லும்.

புதுச்சேரி அரசு சார்பில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவு என்பது காங்கிரஸ் கட்சிக்குப் பயன் தரலாமே தவிர, மாநில மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனளிக்காது. ஆகவே புதுச்சேரி அரசும், துணைநிலை ஆளுநரும் உடனடியாக மாநில நலனுக்கு எதிராக, தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை:

''புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொண்டன. புதுச்சேரியில் தற்போது ஆளும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசும், துணைநிலை ஆளுநரும் பதவியேற்பதற்கு முன்னர் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறிய தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து எம்பிபிஎஸ் படிப்பில் இருந்து 33 சதவீதம் வரை அரசுக்கு இட ஒதுக்கீடாகப் பெறப்பட்டது. ஆனால் அந்த இடங்களும் பெறப்படவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதில் இதுவரை சரியான முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் ஆட்சி முடியும் தருவாயில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் அரசுக்கு முற்றிலும் இட ஒதுக்கீடு கிடைக்காத வகையில் அக்கல்லூரிகளுக்குச் சாதகமாகத் திட்டமிட்டு புதுச்சேரியில், தனியார் பல்கலைக்கழகங்கள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிப்பது என்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து ஒரு இடம்கூடக் கிடைக்காது என்பதை அதிமுக சீர்தூக்கிப் பார்த்து, கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் அமைச்சரவையின் இந்த முடிவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் துணைநிலை ஆளுநருக்குக் கோரிக்கை மனு அளித்தது. ஆனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான முடிவிற்குத் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசின் மாணவர் விரோத முடிவிற்கு ஆளுநர் துணை போகக்கூடாது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்திற்கு எதிரான, திட்டமிட்ட சதிச் செயலை ஆளும் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு அரங்கேற்றியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் புதுச்சேரி ஏழை, எளிய மாணவர்கள் ஒருவர் கூட மருத்துவக் கல்வியைப் பயில முடியாத சூழ்நிலையை அரசின் கடைசிக் காலத்தில் ஆட்சியாளர்கள் செய்துள்ளனர்.

அரசின் பல தவறுகளைத் தடுத்து நிறுத்திய ஆளுநர் இவ்விஷயத்தில் அரசுக்குத் துணை போய் உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாகப் பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளோம்''.

இவ்வாறு அன்பழகன் எம்எல்ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்