ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று: எங்கு, எப்போது, எப்படித் தெரியும்? 

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று (டிசம்பர் 14ஆம் தேதி) நிகழ உள்ளது.

பூமிக்கும் சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும்போது சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் எனப்படும். இந்த நேரத்தில் நிலவின் நிழல், பூமியின் மேற்பரப்பின் மீது விழும்.

நிலவு உருவத்தில் சிறியது என்பதால், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கடந்து செல்லும்போது, அதன் நிழல் பூமியில் எந்தெந்தப் பகுதிகளில் தென்படுமோ, அந்தப் பகுதிகளில் இருந்து மட்டுமே சூரிய கிரகணத்தைக் காண முடியும்.

கடந்த ஆண்டு 2019 டிசம்பர் மாதம் இந்தியாவில் சூரிய கிரகணம் தென்பட்டது. அந்த சூரிய கிரகணமானது தமிழகத்தில் வளைய சூரிய கிரகணம் ஆகவும் வட இந்தியாவில் பகுதி சூரிய கிரகணமாகவும் தென்பட்டது. அச்சமயத்தில் தமிழகத்தில் பல்வேறு அறிவியல் நிறுவனங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த அரிய நிகழ்வினைப் பாதுகாப்பாகக் கண்டுகளித்தனர். அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணம் வட இந்தியாவில் வளைய சூரிய கிரகணமாகவும் தமிழகத்தில் பகுதி சூரிய கிரகணமாகவும் தென்பட்டது.

பேரிடர்க் காலகட்டமான அந்த நேரத்தில் கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் மூலம் இணைய வழியாக சூரிய கிரகணம் காட்சிப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வருடத்தின் இரண்டாவது சூரிய கிரகணம் ஆனது இன்று நிகழவுள்ளது.

எப்போது நிகழ்கிறது?

இந்திய நேரப்படி இந்த நிகழ்வு இன்று இரவு 7:03 மணிக்குத் தொடங்கி டிசம்பர் 15 ஆம் தேதி அதிகாலை 12:23 மணி வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணத்தின் உச்சம் இன்று இரவு 9:43 மணிக்கு நிகழும்.

நவம்பர் 30-ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்தபோது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பகல் நேரம் என்பதால் அப்போது, இந்தியாவில் இருந்தும் இலங்கையிலிருந்தும் அதைக் காணமுடியவில்லை. அதைப் போலவே டிசம்பர் 14ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும்போது, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இரவு நேரம் என்பதால் அப்போதும் இந்தப் பகுதிகளில் இருந்து, சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாது.

சூரிய கிரகணத்தை எங்கிருந்து காண முடியும்?

தென் அமெரிக்கக் கண்டத்தின் தெற்குப் பகுதிகள், ஆஃப்பிரிக்கக் கண்டத்தின் தென்மேற்குப் பகுதிகள், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் இருந்து இன்று சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

கோப்புப்படம்

தென் அமெரிக்காவின் தெற்குப் பகுதியிலுள்ள சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய பகுதிகளில்,சூரிய கிரகணத்தின் உச்சம் நிகழும் இரண்டு நிமிடம், பத்து நொடிகளுக்கு முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) நிகழும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அதாவது இந்த நேரம் பகலிலேயே இருள் போல காட்சியளிக்கும். ஏனென்றால் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே கடந்துசெல்லும் நிலவு, பூமியிலிருந்து சூரியன் தெரியாதபடி முழுமையாக அதை மறைத்துக் கொள்ளும்.

வேறு சொற்களில் சொல்வதானால், சூரிய கிரகணம் உச்சத்தில் இருக்கும் அந்த நேரத்தில் சூரியன் மீது நிலவை வைத்ததைப் போன்ற தோற்றம் பூமியிலிருந்து தெரியும். அப்போது நிலவின் நிழல் பூமியின்மீது விழுந்து, சூரிய ஒளி விழாதபடி செய்யும்.

சூரியன் நிலவைவிடப் பன்மடங்கு பெரியது என்றாலும், சூரியன் பூமியிலிருந்து வெகு தொலைவிலும், நிலவு பூமிக்கு அருகாமையிலும் இருப்பதால் இந்தத் தோற்றம் உண்டாகும்.

சூரிய கிரகணத்தை எப்படிப் பார்ப்பது?

நிலவின் நிழல் விழாத பூமியின் பகுதிகளில் இருப்பவர்களும், சூரிய கிரகண நேரத்தின்போது இரவாக இருக்கும் பகுதிகளில் இருப்பவர்களும்கூட சூரிய கிரகணத்தைக் காணும் வகையில் அதை இணையம் மூலம் நேரடியாக நாசா ஒளிபரப்பும். அதேபோலப் பல்வேறு சமூக ஊடக பக்கங்களும், யூடியூப் சேனல்களும் இதை ஒளிபரப்பும்.

சூரியன் 99% மறைக்கப்பட்டு, ஒரு சதவிகிதம் மட்டுமே தென்பட்டாலும் கூட அதைப் பார்த்தால் கண் பாதிக்கப்படும். 14 ஆம் எண் கொண்ட வெல்டர் கண்ணாடிகள், அலுமினியம் பூசப்பட்ட 'மைலர்' அட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்கிறது நாசா. வழக்கமான சன் கிளாஸ், எக்ஸ் ரே, போட்டோ நெகட்டிவ் போன்ற ஃபில்டர்கள் பாதுகாப்பானவை அல்ல. இவற்றால் விழித்திரைக்கு உண்டாகும் பாதிப்பை முற்றிலும் தடுக்க முடியாது.

-கண்ணபிரான்,
ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்