எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வில் முன்னிலை பெற்ற 10 பேர் எம்எம்சி-யை தேர்வு செய்தனர்: கட்டணம் செலுத்த முடியாத 3 மாணவிகளுக்கு சேர்க்கை ஆணை

By செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். அவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான ஆணைகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. தரவரிசை பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்தவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை பெற்றுவிட்டதால், அவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதையடுத்து, அடுத்த நிலைகளில் இருந்தவர்கள் தரவரிசை பட்டியலில் முன்னிலைக்கு வந்தனர். முதல் 10 இடங்களில் இருந்தவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்தனர். அந்த 10 பேருக்கும் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் ஜி.செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:

கரோனா தொற்று காலம் என்பதால் பொது சுகாதார விதிமுறைகளின்படி கலந்தாய்வு நடந்து வருகிறது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 399 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 6 பிடிஎஸ் இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. புதிதாக கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்க இருப்பதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கல்விக் கட்டணம் செலுத்த முடியாது என அரசுப் பள்ளி மாணவர்கள் இடங்களை தேர்வு செய்யாமல் இருக்க வேண்டாம். கல்வி, விடுதி உள்ளிட்ட அனைத்து கட்டணத்தையும் அரசு ஏற்கிறது. இடங்களை தேர்வு செய்யாமல் விட்டுச்சென்ற மாணவர்களுக்கு 2-ம்கட்ட கலந்தாய்வில் வாய்ப்பு வழங்கப்படும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை மட்டும் நடத்த வேண்டும். கல்விக் கட்டணத்தை கேட்கக் கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கடந்த 18-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அன்றைய தினமே தமிழக முதல்வரும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.

துரைமுருகனுக்கு கண்டனம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாதவர்கள் ஏன் மருத்துவராக வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. எல்லோராலும், எல்லாம் முடியாது. அதனால்தான் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கிறது. ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியை முழுவதுமாக அரசு ஏற்பதற்கான பணி நடந்து வருகிறது. அதன்பிறகு, அந்த கல்லூரியின் கல்விக் கட்டணம் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று மாணவிகள்

7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்ற திவ்யா,கவுசிகா, தாரணி ஆகிய மாணவிகளுக்கு தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இடம் கிடைத்தது. கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லாததால், இடங்களை தேர்வு செய்த பிறகு சேர்க்கை ஆணையை வாங்காமல் சென்றுவிட்டனர். நேற்று இந்த 3 பேரையும் அழைத்து சேர்க்கை ஆணையை வழங்கிய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ‘‘கல்லூரிகளில் உங்களுக்கு கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே செலுத்திவிடும். நீங்கள் ஒரு ரூபாய்கூட செலவு செய்ய வேண்டாம். தைரியமாக கல்லூரிக்கு செல்லுங்கள்’’ என்று அறிவுரை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்