அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரைச் சந்திக்க புதுவை முதல்வர் நாராயணசாமி முடிவு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்ற போதிலும் கூட்டணிக் கட்சியான திமுக புறக்கணித்தது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அது மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

சட்டப்பேரவையின் 4-வது மாடியில் நடந்த இக்கூட்டத்தில் காங்கிரஸ், அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம் உட்பட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றன. அதே நேரத்தில் ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சியான திமுக பங்கேற்கவில்லை.

திமுக பங்கேற்காதது தொடர்பாக அக்கட்சியின் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தைப் போல் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் கோப்பு தயாரித்து அனுப்பியிருந்தாலே இந்த ஆண்டே உள் ஒதுக்கீடு கிடைத்திருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புதுச்சேரி அரசின் தாமதமான, அலட்சியமான, கவனக்குறைவான செயலால் இந்த ஆண்டு உள் ஒதுக்கீடு பெற்றுத் தர முடியுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவை முடிவிற்கே ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில், சட்டப்பேரவையைக் கூட்டி ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினால் ஏதேனும் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு கிடைக்க அரசு எடுக்கும் அனைத்து உறுதியான நிலைப்பாட்டிற்கும் திமுக ஆதரவு அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி அரசு மீது திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களைச் சமாதானப்படுத்த முதல்வர் முயன்றார். அது நிறைவேறவில்லை. குறிப்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் புதுச்சேரி மாணவர்களுக்குப் பெறாமல் இருப்பதால் மக்களிடையே கடும் அதிருப்தி இருப்பதும் புறக்கணிப்புக்கு முக்கியக் காரணம்" என்று குறிப்பிட்டனர்.

அதிமுக சட்டப்பேரவைக் குழுத்தலைவர் அன்பழகன் கூறுகையில், "கட்சி வித்தியாசமின்றிப் புதுச்சேரி மாணவர் நலனுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோம். அதிமுகவின் கருத்தைப் பதிவு செய்துள்ளோம். கூட்டணிக் கட்சியான திமுக, அரசுக்குத் தரும் ஆதரவைத் திரும்பப் பெறுகிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். திமுக கூட்டணியில் இருக்கலாமா என்பதை முதல்வர் நாராயணசாமி முடிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும், புதுச்சேரி அரசு எடுத்துள்ள இந்த உள் ஒதுக்கீட்டுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

உள் ஒதுக்கீடு கொடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. காலதாமதப்படுத்தவே மத்திய அரசுக்குத் துணைநிலை ஆளுநர் கோப்பினை அனுப்பி உள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். சட்டரீதியாகச் சந்திக்கவும் ஆலோசிக்க உள்ளோம். துணைநிலை ஆளுநரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மேல் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கச் சட்ட வடிவமாகத் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இதையும் துணைநிலை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். அந்தச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்