புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கும் சத்துணவு உலர் பொருட்கள் வழங்கிடுக; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

By கரு.முத்து

அரசுப் பள்ளிகளில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களுக்கும் சத்துணவுக்கான உலர் பொருட்கள் வழங்கிட வேண்டும் எனத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகப்பட்டினம் வட்டாரச் செயலாளர் கி.பாலசண்முகம் தெரிவித்ததாவது:

"கரோனா பெருந்தொற்று அச்சத்தால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்கப்படாவிட்டால் அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கோரிக்கையை ஏற்றும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றியும் தமிழக அரசுப் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு உலர் பொருள்களாக அரிசி மற்றும் பருப்பை வழங்கிட அரசு ஆணை பிறப்பித்தது.

இதன்படி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு என்று அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் அரசு உத்தரவின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. என்றாலும் பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு உலர் பொருட்கள் வழங்கப்படவில்லை.

இதுபற்றிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் கடந்த ஆண்டு இருந்த மாணவர் எண்ணிக்கையின்படியே உணவுப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ‌புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்னும் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், பெற்றோர்கள் தரப்பில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர்.

மற்ற வகுப்பில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு உலர் பொருட்களை வழங்கிவிட்டு ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு மட்டும் வழங்காமல் திருப்பி அனுப்புவது, தலைமை ஆசிரியர்களுக்கும் சத்துணவு அமைப்பாளர்களுக்கும் பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாத வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கணக்கிட்டு அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும்.

தமிழக அரசு, முதல்வர், சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோர் இந்தக் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு பாலசண்முகம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்