பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர 1,465 இடங்களுக்கு 869 பேர் விண்ணப்பம்: அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு

By த.சத்தியசீலன்

பகுதிநேர பி.இ., பிடெக். படிப்புகளை நடத்தும் தமிழகத்தில் உள்ள 9 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,465 இடங்களுக்கு 869 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில், மாநிலத்தில் செயல்பட்டு வரும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி), சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் படிப்புகளுக்கான மாநில அளவிலான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகளில் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதி குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ கூறியதாவது:
''பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த அதே மையங்களில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி), பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பாலசுந்தரம் ரோடு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மையங்களில் இணைய வழியாக மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

கடந்த ஆக.10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலான நாட்களில் 1,201 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 869 பேர் கட்டணம் செலுத்தி உறுதி செய்துள்ளனர். பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகளில் மொத்தமுள்ள 1,465 இடங்களுக்கு 869 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்து செப். 10-ம் தேதி அறிந்து கொள்ளலாம். 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களை ஆன்லைன் மற்றும் காணொலிக் காட்சி மூலமாகக் கேட்டு விளக்கம் பெறலாம். செப்.17-ம் தேதி காலை 10 மணிக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

செப்.19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கும், தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் செப். 23, 24, 26, 27 ஆகிய தேதிகளில் முதல் கட்டமாகவும், 28, 29, அக். 3 மற்றும் 4-ம் தேதிகளில் 2-ம் கட்டமாகவும், அக். 5, 6, 8, 9 ஆகிய தேதிகளில் 3-ம் கட்டமாகவும் பொதுப் பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெறும்''.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

54 mins ago

வாழ்வியல்

59 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்