நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவையுங்கள்: சுமார் 4000 மாணவர்கள் முழுநாள் உண்ணாவிரதப் போராட்டம்

By பிடிஐ

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவையுங்கள் என்று வலியுறுத்தி, அகில இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 4000 மாணவர்கள் முழுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீடுகளிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்படும் என தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது.

நீட் தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும் கடந்த வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தேர்வுகளைத் தள்ளி வைக்கவேண்டும் என்று கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் வீடுகளிலேயே நாள் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த இவர்கள், யுஜிசி நெட், நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். SATYAGRAHagainstExamInCovid என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதுகுறித்து கர்நாடகாவைச் சேர்ந்த ஜேஇஇ தேர்வெழுத உள்ள மாணவர் மனோஜ், ''காலையில் 7 மணிக்குத் தேர்வெழுதும் மையத்தில் நாங்கள் இருக்க வேண்டும். வீட்டில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் தேர்வு மையம் உள்ளது. தற்போது பேருந்து, ரயில் சேவைகள் இல்லாத நிலையில், எவ்வாறு நான் அங்கே செல்ல முடியும்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த நீட் மாணவி அனிஷா கூறும்போது, ''என்னுடைய நண்பர்கள் 200 முதல் 250 கி.மீ. பயணம் செய்து தேர்வெழுதச் செல்ல வேண்டும். எப்படி எங்களால் 7 முதல் 8 மணி நேரம் முகக்கவசம் அணிந்து தேர்வெழுத முடியும்?'' என்றார்.

பிஹாரைச் சேர்ந்த நீட் மாணவர் தனிஷ் கான், ''கரோனா ஹாட் ஸ்பாட்டான பாட்னாவில் எனக்குத் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே உறவினர்கள் வீட்டில் தங்கிவிட்டு, தேர்வெழுதச் சென்று அவர்களையும் ஆபத்துக்குள்ளாக்க விரும்பவில்லை. கூட்டுக் குடும்பமாக உள்ள எங்களின் வீட்டில் எனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டால், அது சங்கிலியாக மற்றவர்களையும் பாதிக்கும்'' என்று கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 31 லட்சத்து 67 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்