சிபிஎஸ்இ டூ அரசுப்பள்ளி: 3 நாட்களில் 230 மாணவர்கள் சேர்க்கை- திருச்சி பீமநகர் நடுநிலைப் பள்ளி அசத்தல்

By க.சே.ரமணி பிரபா தேவி

சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் உள்பட 3 நாட்களில் 215 மாணவர்கள் திருச்சி, பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாகச் சேர விண்ணப்பித்துள்ளனர்.

அப்படி இந்தப் பள்ளியில் என்ன சிறப்பம்சங்கள்?

சத்தான இலவசக் காலை உணவு, தரமான கல்வி, சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள், கணினிப் பயிற்சி, சிலம்பம், கராத்தே, சதுரங்கம், அபாகஸ் போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் கற்பிக்கப்படுகின்றன. கற்றலுடன் கல்வி இணை செயல்பாடுகள், இணைய வழிக் கற்றல், தொடுதிரை வசதி, ஆளுமைத்திறன் மேம்பாட்டுத்திறன் பயிற்சி ஆகியவையும் பீமநகர் நடுநிலைப்பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளியின் செயல்பாடுகள் அனைத்தும் http://mmsbeemanagar.blogspot.com என்ற வலைப்பூ பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை குறித்து பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி கூறும்போது, ''பள்ளியில் மாணவர் சேர்க்கைக்குப் பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. மாணவர் சேர்க்கை ஆரம்பித்த 3 நாட்களில் 230 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 67 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது திருச்சி மாவட்டத்தில் வேறெந்த நடுநிலைப் பள்ளியிலும் இல்லாத அதிகபட்சச் சேர்க்கை எண்ணிக்கை ஆகும்.

சிபிஎஸ்இ டூ அரசுப்பள்ளி

இரண்டு பெற்றோர்கள் சிபிஎஸ்இ பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தங்களின் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். காரணம் கேட்டால், 'அங்கு கட்டணம் வாங்குகிறார்களே தவிர, கல்வித்தரம் முழுமையாக இல்லை. மகளின் படிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைப் படிக்க வைக்கும் அண்டை வீட்டுக்காரர்கள் சொல்வதைக் கேட்டும் அவர்களின் குழந்தைகளைப் பார்த்தும் இங்கே கொண்டு வந்து சேர்க்கிறோம்' என்கின்றனர்.

இன்னும் சிலர், 'தனியார் பள்ளிகளில் தலைமை ஆசிரியரிடம் பேசக்கூட முடியாது. அரசுப்பள்ளிகளில் அப்படியில்லை. உங்கள் ஆசிரியர்கள் எல்லோரும் கரோனா காலத்திலும் பெற்றோர்களைப் போல கவனித்துக் கொள்கிறீர்கள். படிக்க ஆலோசனை வழங்குகிறீர்கள்' என்றனர்.

தனிமனித இடைவெளியுடன் நடைபெறும் மாணவர் சேர்க்கை

8-ம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், இந்த ஓராண்டாவது இங்கே படிக்கட்டும். அதற்குள் உங்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆனால் அப்படியே மகன் படிப்பான் என்று சொல்கின்றனர்'' எனப் பெருமிதப் புன்னகை பூக்கிறார் ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி.

தனியார் பள்ளிகளில் டிசி கொடுக்காவிட்டாலும் இங்கே சேர்த்துக் கொள்வீர்களா என்றும் பெற்றோர்கள் கேட்பதாகச் சொல்கிறார்.

ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி குறித்து...

ரூ.5 லட்சம் சொந்த செலவில் பள்ளியை நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்தவர் ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி. சொந்த செலவில் கழிப்பறை, கணினி அறை, நூலகம் அமைத்தது, மாதாமாதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குச் சம்பளம் அளிப்பது, மாணவர்களுக்கு வண்ணச் சீருடைகள், ஷூ, டை வாங்கிக் கொடுப்பது, யோகா ஆசிரியருக்குத் தானே சம்பளம் அளிப்பது என ஆசிரியை ராஜ ராஜேஸ்வரியின் கொடைப் பயணம் நீள்கிறது.

2016-ல் கிடைத்த ஏஇஓ பதவி உயர்வை, வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 44 மாணவர்கள் இருந்த நடுநிலைப் பள்ளியில், இப்போது 645 பேர் படிப்பதில் அவரின் வெற்றி தனித்து மிளிர்கிறது.

க.சே.ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்