8 மாதங்களாக ஊதியமில்லை; புதுச்சேரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கடந்தாண்டு டிசம்பர் முதல் 8 மாதங்களாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 450 ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் தராத அவல சூழல் நிலவுகிறது. அதேபோல் இங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற 400 ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிப்பில் உள்ளனர். இதனால் சுதந்திர தினம் முதல் அவர்கள் அனைவரும் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 32 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இங்கு ஏறக்குறைய 450 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 400 க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் 8 மாதங்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் இதுவரை தரப்படவில்லை.

இதுதொடர்பாக புதுவை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்புச் செயலர் மார்ட்டின் கென்னடி கூறியதாவது:
புதுவை அரசு உதவி பெறும் பள்ளிகள் புதுவை கல்விச் சட்டம் 1987 மற்றும் கல்வி விதிகள் 1996 இவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன. அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளும் அவர்களுக்கு இணையாக அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்று இச்சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாகக் கல்வித்துறை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது

கல்வித்துறையில் அரசு நிதி உதவி பெறும் பிரிவிலுள்ள இளநிலைக் கணக்கு அலுவலர் ஒருவர் தவறான தகவல்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பியதன் காரணமாக மாதந்தோறும் அரசு ஆசிரியர்களுக்கு இணையாக வரவேண்டிய ஊதியம் 8 மாதமாகத் தடைபட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளின் இந்தப் போக்கு தவறானது. கல்வித் துறையையும், அரசு தரப்பையும் பல முறை நாடி வலியுறுத்தியும் 8 மாதங்களாக ஊதியம், ஓய்வூதியம் கிடைக்காததால் சுமார் 850 குடும்பத்தினர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கரோனா காலத்தில் எங்கள் குடும்பத்தில் குழந்தைகள் தொடங்கி பெரியோர் வரை பலரின் துயர் சொல்ல முடியாத நிலையில் உள்ளது. அன்றாட அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளோம். வீட்டில் அவதியுறுவதை விட, தடையை மீறிப் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்.

அரசின் தவறான மனப்பான்மையைக் கண்டித்தும், ஊதியம் தரக்கோரியும் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தொடர் தர்ணாவும், கோரிக்கை நிறைவேறும் வரையும் காத்திருப்புப் போராட்டமும் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 mins ago

விளையாட்டு

45 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்