குழந்தைகளிடையே தமிழ் வாசிப்பை ஊக்குவிக்க மாணவ வாசக சாலை திட்டம்: சிறப்புப் பரிசுகள் உண்டு

By க.சே.ரமணி பிரபா தேவி

மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் இளம் தலைமுறையிடையே வாசிக்கும் பழக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதிலும் தமிழ் வாசிப்பு வளரும் தலைமுறையிடையே இருக்கிறதா என்பது சந்தேகமே. பள்ளிகளில் தமிழைப் பாடமாகப் படிப்பதே குறைந்து வரும் சூழலில், வாசிப்பு குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை.

இந்த வழக்கத்தை மாற்றி, குழந்தைகளிடையே தமிழ் வாசிப்பை மீட்டெடுக்க மாணவ வாசகசாலை என்னும் திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

துபாய் வாழ் தமிழரும் அரசுப் பள்ளிகளுக்குத் தன்னார்வத்துடன் தொடர்ந்து உதவி வருபவருமான ரவி சொக்கலிங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இதன்படி பள்ளி மாணவர்கள் மாதத்துக்குக் குறைந்தது ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும். புத்தகத்தைச் சரியாக உள்வாங்கி, அதைத் திறம்பட வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

மாணவிக்குப் பதக்கத்துடன் கூடிய சான்றிதழ்.

இந்தத் திட்டத்தை முன்னெடுத்தது குறித்து விரிவாகப் பேசும் ரவி சொக்கலிங்கம், அமெரிக்கப் பள்ளிகளில் குழந்தைகளை வாசிக்க வைக்கும் பழக்கம் இன்னும் வழக்கத்தில் உள்ளது. நம் நாட்டில் குறைந்துவரும் வாசிப்பை மீண்டும் அதிகரிக்க ஆசைப்பட்டதன் எண்ணமே இந்தத் திட்டம்.

பள்ளிகளில் பாடம் விடுத்து, பிடித்த துறை சார்ந்த புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். கதை, கவிதை, வரலாறு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என அந்தப்புத்தகம் எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தமிழில் எழுதப்பட்ட புத்தகமாக இருக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் மாதக் கடைசியில் அதை வெளிப்படுத்த வேண்டும். அது எழுத்து வடிவமாகவோ, பேச்சு வடிவமாகவோ இருக்கலாம். அவர்களுக்கு எது எளிதாகக் கைவருமோ அந்த விதத்தில் வெளிப்படுத்தலாம்.

இதில் சிறப்பாகச் செயல்படும் குழந்தைகளை, அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் கண்டறிந்து அவர்களுக்குச் சான்றிதழும் பதக்கமும் வழங்குகிறோம். அதே குழந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இரண்டு புத்தகங்கள் படித்து, உள்வாங்கி, சிறப்பாகச் செயலாற்றும் மாணவர்களுக்கு இரண்டு சான்றிதழ்கள் உண்டு என்கிறார் ரவி சொக்கலிங்கம்.

கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், இத்திட்டம் தடைப்பட்டது. ஆனால் வாசிப்பு தடைப்பட்டு விடக்கூடாது என்று எண்ணி, மாற்று வழியை யோசித்தார். கதைசொல்லி வனிதாவுடன் இணைந்து கதைக்களம் அமைப்பின் சார்பில் குழந்தைகள் கதைகள் சொல்லும் நிகழ்வை நடத்தி வருகிறார். சிறப்பாகக் கதைசொல்லும் மாணவர்களுக்குப் பரிசுகள் உண்டு.

கரோனாவுக்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்வு

இதுகுறித்தும் பேசுபவர், ''கதை சொல்லும் நிகழ்வுடன் புத்தக வாசிப்புப் போட்டிகளையும் தற்போது ஆன்லைனில் நடத்தி வருகிறோம். இணைய வாயிலாக நடத்துவதால் நகரங்களில் படிக்கும் குழந்தைகள் அதிக அளவில் கலந்துகொள்கின்றனர்.

இதன் மூலம் நகரப் பள்ளிக் குழந்தைகளின் தமிழ் வாசிப்பு மேம்படுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. ஆரம்பக் கட்டத்தில் கதைக்களம் வாயிலாக ஈரோட்டில் ஆன்லைன் நிகழ்வைத் தொடங்கினோம். தற்போது கோயம்புத்தூரில் 14 பள்ளிகளில் இந்த வாசிப்பு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டு, பள்ளிகளிடையே பேசி வருகிறோம்.

அடுத்தகட்டமாக ஆசிரியர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க, ஆசிரிய வாசகத் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகிறோம். அவர்களின் வாசிப்பு மறைமுகமாக மாணவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். தமிழ்ச் சமூகத்தின் வாசிப்பை மீட்டெடுக்க நம்மாலான சிறு முயற்சி இது. வாருங்கள் வாசிப்போம்... வானம் அளவு யோசிப்போம்'' என்கிறார் ரவி சொக்கலிங்கம்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்