மலை கிராமத்தில் முதன்முறையாக 12-ம் வகுப்பில் தேர்ச்சி: பழங்குடி மாணவி உயர்கல்விக்கு உதவிக்கரம் நீட்டிய பெண் டிஎஸ்பி

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் அருகே மலை கிராமத்தில் முதன்முறையாக 12-வது வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள பழங்குடியின மாணவியை தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா நேரில் சந்தித்து பாராட்டினார்.

அப்போது உயர் கல்விக்கு உதவி செய்வதாகக் கூறியதுடன், அரசு வேலை கிடைத்து வாழ்க்கையில் உயர்நிலைக்கு வந்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் மாணவி மற்றும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்.

தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மலைப்பகுதியில் இருளப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் உள்ள 55 வீடுகளில் இருளர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வாசித்து வருகின்றனர். இந்த பழங்குடியினரில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.

மிகவும் பின்தங்கிய மலை கிராமமான இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ், நாகம்மா தம்பதியின் மகளான மாணவி கிருஷ்ணவேணி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகவல் டிஎஸ்பியிடம் தெரிவிக்கப்பட்டது. இருளப்பட்டி கிராமத்தில் இதுவரை 10-ம் வகுப்பு கூட யாரும் தேர்ச்சி பெறாத நிலையில் முதன்முறையாக 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவியை நேரில் அழைத்துவரச் செய்த டிஎஸ்பி சங்கீதா, மாணவியைப் பாராட்டி வாழ்த்தினார்.

மேலும் உயர்கல்வியைத் தொடர வேண்டும் எனவும், அதற்காக எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியதுடன், மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாக நிதியுதவியும் வழங்கினார். இந்த நிகழ்வில் கெலமங்கலம் எஸ்.ஐ. பார்த்தீபன், ராயக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் கமலேஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து டிஎஸ்பி சங்கீதா இந்து தமிழ் இணையதளத்திடம் கூறியதாவது:

‘’காவல்துறை சார்பில் கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மலை கிராமத்தைத் தேர்வு செய்து நிவாரணப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மிகவும் பின்தங்கிய மலை கிராமமான இருளப்பட்டி கிராமத்தைத் தேர்வு செய்து நிவாரணப்பொருட்களை வழங்கினோம். அச்சமயம் இந்த மலைக்கிராமத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களாக என்று கிராம மக்களிடம் விசாரித்தேன். அப்போது இருளப்பட்டி மலை கிராமத்தில் முதல்முறையாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி கிருஷ்ணவேணி பற்றி தெரியவந்தது. கிருஷ்ணவேணியின் தந்தை முனிராஜ், தாய் நாகம்மா ஆகியோர் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.

மாணவி கிருஷ்ணவேணியின் அக்காவுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. இங்குள்ள மக்களிடையே குழந்தைத் திருமணம் செய்யும் பழக்கமுள்ளது. குறிப்பாக பெண்களுக்குச் சிறுவயதிலேயே அதாவது 8-வது வரை படித்ததும் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். உயர் கல்வி கற்க அனுப்புவது இல்லை. ஆகவே இந்த இருளப்பட்டி மலை கிராமத்தில் முதல்முறையாக 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியை அழைத்து வரச்செய்து பாராட்டினேன். மாணவி கிருஷ்ணவேணி, தனக்கு பி.காம் படிக்க விருப்பமுள்ளதாக என்னிடம் கூறினார்.

அப்போது மத்திய, மாநில அரசுகளில் உள்ள இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை ஆகிய சலுகைகளைப் பயன்படுத்தி பி.காம், சி.ஏ. உள்ளிட்ட உயர் கல்வியைப் படிக்கவும், அதன் மூலமாக வேலைவாய்ப்புக்கான கிராமநி ர்வாக அலுவலர், மாநில அரசின் குரூப்-1 முதல் குரூப்-4 வரையிலான தேர்வுகள், மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகள் எழுதி அரசு வேலை பெறவும் வாய்ப்புள்ளதாக மாணவியிடம் விளக்கிக் கூறினேன்.

மேலும் தமிழ்நாட்டில் பெண்களுக்கெனத் தனி இடஒதுக்கீடு இருப்பது, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு உள்ள சிறப்பு இடஒதுக்கீடு ஆகியவை பற்றியும் மாணவியிடம் கூறினேன். மேலும் மாணவி கிருஷ்ணவேணியிடம் உயர்கல்வி பயின்று, அரசு வேலையில் சேர்ந்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் எனவும், அதற்கு முன் சிறுவயதில் திருமணம் செய்து வைக்க கூடாது என்று மாணவியின் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.

மாணவியிடம் உயர் கல்வியைத் தொடரத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதாகக் கூறியுள்ளேன். அதற்காக எப்பொழுது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ள வசதியாக எனது செல்போன் எண்ணை எழுதிக் கொடுத்துள்ளேன். அதேபோல மாணவியின் கல்வி உதவிக்கு கெலமங்கலம் காவல் நிலையத் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது’’.

இவ்வாறு தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்