‘இந்து தமிழ் திசை’ நடத்தும் இணைய வழி பயிலரங்கம் தொடங்கியது; விண்வெளி ஆராய்ச்சி துறையில் அதிக வேலைவாய்ப்பு- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உறுதி

By ம.சுசித்ரா

கரோனாவுக்கு பிறகு விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று ‘இந்து தமிழ் திசை’நடத்தும் ‘விஞ்ஞானி ஆவது எப்படி?’ இணைய வழி பயிலரங்கின் தொடக்க நாள் நிகழ்வில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்துடன் (என்டிஆர்எஃப்) இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘விஞ்ஞானி ஆவது எப்படி?’ என்ற 5 நாள் இணைய வழி பயிலரங்கம் நேற்று தொடங்கியது.

முதல் நாள் விரிவுரையை என்டிஆர்எஃப் தலைவரும், ‘சந்திரயான்’ திட்ட இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார். ‘விண்வெளி விஞ்ஞானி ஆவது எப்படி?’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:

விண்வெளி விஞ்ஞானியாக உருவெடுக்க முதலில் அறிவியல் பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், ஏன்? எப்படி? எதற்கு? என கேள்விகளை எழுப்பி,அதற்கான விடைகளைத் தேடுவதே அறிவியலின் தொடக்கம். இத்தகைய கேள்விகள் மூலமாகத்தான் விலங்குகளைப் போல பிறந்து, உண்டு, உறங்கி, வளர்ந்து,குழந்தை ஈன்று, இறந்துபோன மனித இனம் பிறகு வளர்ச்சிப் பாதையில் முன்னேறத் தொடங்கியது.

அனைத்து செயல்களுக்கும் தனது கை, கால்களை மட்டுமே பயன்படுத்திவந்த மனித இனம் இன்று செயற்கை நுண்ணறிவைப் படைக்கும் தொழிலில் 4.0 நிலைக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதே வளர்ச்சி கல்விப்புலத்திலும் நடைபெற வேண்டும்.

கரோனா பரவலால் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளோம். இது வரலாறு காணாத கொள்ளை நோய் என்கிறோம். ஆனால், வரலாற்றில் இதுபோலபல கொள்ளை நோய்கள் ஏற்பட்டுள்ளன. பிளேக், அம்மை, ஸ்பானிஷ் காய்ச்சல், உலகப் போர்கள் போன்ற பல சோதனைகளுக்குப் பிறகே உலகம் மிகச் சிறப்பாக வளர்ந்திருக்கிறது. பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதேபோல, கரோனாவுக்கு பிறகும் உலகம் முன்பைவிட இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும்.

கரோனாவால் உலகமே ஸ்தம்பித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும்போது அமெரிக்கா, சீனா மட்டுமின்றி இந்தியாவிலும் விண்வெளி ஆராய்ச்சியில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனியார் பங்களிப்பும் இருக்கப்போகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இஸ்ரோ மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் வரவிருப்பதால் இத்துறை மிகப் பெரிய வேலைவாய்ப்பு உள்ள துறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

‘விஞ்ஞானி ஆவது எப்படி?’ இணைய வழி பயிலரங்கம் தொடர்ந்து ஜூன் 5, 6, 7, 8 ஆகியநாட்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

இதில் சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் முனைவர் ரமணன், என்டிஆர்எஃப் இயக்குநர் விஞ்ஞானி வி.டில்லிபாபு, முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், முனைவர் பி.வெங்கட்ராமன் ஆகியோரும் உரை நிகழ்த்த உள்ளனர்.

பயிலரங்கத்தில் பதிவுசெய்து பங்கேற்கும் அனைவருக்கும் என்டிஆர்எஃப் இயக்குநர் வி.டில்லிபாபு எழுதிய ‘அடுத்த கலாம்’ புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்