10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூனில் நடத்துக: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவையும் விட்டு வைக்காத கரோனா, கர்நாடகா, டெல்லி, மும்பையில் தலா ஒருவர் வீதம் மூன்று பேரைப் பலிவாங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு அரங்குகள், மால்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது.

தற்போது 11, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. மேலும் மார்ச் 27-ம் தேதி பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட 10-ம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதால் கரோனா பீதியால் பெற்றோர்களும் மாணவர்களும் அச்சத்தில் உள்ளார்கள். கரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் பாதுகாப்பது அவசியம்.

பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி தினந்தோறும் கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை மேற்கொண்டாலும் தனிமைப்படுத்துதலே சிறந்த தற்காப்பு நடவடிக்கையாகும். ஆகையால் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சியளிக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும்.

அதேபோல 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருக்கும் இரண்டு தேர்வுகளையும் இரண்டு வாரங்கள் தள்ளிவைக்கவும் ஆவன செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம்'' என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று உ.பி. அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வந்த பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் தமிழகத்தில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். 9-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்று உத்தரவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்