பிப்ரவரி 13: உலக வானொலி நாள்

By செய்திப்பிரிவு

பிப்ரவரி 11: தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள்

உலக வரலாற்றில் மிக அதிக கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியவரான தாமஸ் ஆல்வா எடிசன் 1847 பிப்ரவரி 11 அன்று ஓஹையோ மாநிலத்தில் பிறந்தார். பெற்றோர் அளித்த ஊக்கம் காரணமாகச் சிறுவயதிலேயே நிறைய நூல்களைப் படித்தார், ஆராய்ச்சி மனோபாவத்தை வளர்த்துக் கொண்டார். ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த போது ஒரு ரயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி ’வீக்லி ஹெரால்டு’ வார இதழை வெளியிட்டார். அங்கேயே அவரது தொடக்ககால கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்தன.

அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரயில் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இதையும் தாண்டி 1000-க்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகளை நிகழ்த்தினார். 1093 கண்டு பிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றார். மின்சார பல்பு, மின்சார ஜெனரேட்டர், மின்விசிறி, கிராமபோன். ஒலிபெருக்கி. திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி, ஆகியவை இவரது முக்கியமான கண்டுபிடிப்புகளில் சில.

பிப்ரவரி 12: பரிணாமவியலின் தந்தை பிறந்த நாள்

அமீபா முதல் மனிதர்கள் வரை உலகில் உள்ள உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பதை விளக்கும் பரிணாமவியல் கோட்பாட்டை (Theory of Evolution) உலகுக்கு அளித்த சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில் உள்ள ஷ்ராஸ்பெரியில் 1809 பிப்ரவரி 12 அன்று பிறந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியலில் பட்டம் பெற்றார். ஆனால், உயிரினங்களின் தோற்றம்
பற்றி அறிந்துகொள்வதிலேயே அவருக்குத் தீவிர ஆர்வம் இருந்தது.

தென் அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்கான ஹெச்.எம்.எஸ்.பீகில் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றார். ஐந்தாண்டு கப்பல் பயணத்தில் ஊர்வன, பறப்பன, நடப்பன என பலவகை உயிரினங்கள், தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்தார். தான் கண்டறிந்த தகவல்களையும், சேகரித்த மாதிரிகளையும் வைத்து ஆராய்ச்சியில் இறங்கினார்.

பல ஆண்டு கடின உழைப்பின் பலனாக பரிணாமவியல் கோட்பாட்டை உருவாக்கினார். இது டார்வின் கோட்பாடு என்றும் அழைக்கப்படுகிறது. அதை விளக்கும் வகையில் ‘The Origin of Species by Natural Selection’ என்ற புத்தகத்தை எழுதினார். மொத்தம் 18 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் பரிணாமவியலின் தந்தை என்றே அழைக்கப்படுகிறார்.

பிப்ரவரி 13: உலக வானொலி நாள்

தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டு பிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.

வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐநா துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13-ஐ உலக வானொலி நாளாக 2011-ல் அறிவித்தது. 1946-ல் ஐநா வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13
உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிப்ரவரி 14: யூடியூப் தொடங்கப்பட்ட நாள்

இணையத்தில் காணொளிகளைப் பதிவேற்றக்கூடிய, பார்க்கக்கூடிய வசதிகளைத் தரும் பல இணையதளங்கள் இன்று இருக்கின்றன. காணொளி பதிவேற்ற இணையதளங்களில் மிகப் பிரபலமான முன்னோடியான யூடியூப் 2005 பிப்ரவரி 14-ல் தொடங்கப்பட்டது. சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், ஜாவேத் கரீம் ஆகிய இளைஞர்களால் தொடங்கப்பட்ட யூடியூப் தளத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது.

2006-ல் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதன் துணை நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவருகிறது. காணொளிகளைப் பதிவேற்றுதல், பகிர்தல், பார்த்தல், கருத்துகளைத் தெரிவித்தல், விருப்பம் / விருப்பமின்மைக் குறியிடுதல், மதிப்பிடுதல் ஆகிய வசதிகளை யூடியூப் தருகிறது. இன்று உலகின் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தங்கள் காணொளி வடிவச் செய்திகளை யூடியூபில் வெளியிடுகின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று கோடிப் பேர் யூடியூப் தளத்தைப் பார்க்கின்றனர்.

- தொகுப்பு: கோபால்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்