குட்டிக் கதை 1: விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும்?

By செய்திப்பிரிவு

கதைகளின் வழியே, குழந்தைப் பருவத்திலேயே நீதியைப் புகட்டிச் சென்றவர்கள் நம்முடைய முன்னோர்கள். அவ்வழியில், குட்டிக் கதைகள் வழியாகவும் பழமொழிக் கதைகள் வழியாகவும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் நற்பண்புகளை சொல்லிக் கொடுக்கிறார் ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலாவல்லி அருள்.

இனி கதைக்குள் செல்வோமா?

ஓர் அழகிய பள்ளி அது. எட்டாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

“என்ன பிள்ளைகளா, சில நாட்களுக்கு முன்னால நம்ம பள்ளித் தோட்டத்தில விதை வதைச்சீங்களே, தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வர்றீங்களா?’’

”ஆமாம் சார், தினமும் தண்ணி ஊற்றி நல்லா கவனிச்சிட்டு வர்றோம் சார்”

“சரி, அப்படின்னா அந்த செடிகள் எல்லாம் எப்படி வளர்ந்திருக்குன்னு இப்போ போய் பார்த்திட்டு வரலாமா?”

“சரிங்க சார்”

“தருண், நீ என்ன விதை விதைச்ச?”

“கத்தரி விதை சார்”

“சரி, மத்தவங்க என்ன விதை விதைச்சீங்கன்னு சொல்லுங்க”

தக்காளி, அவரை, பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், வெண்டை, பாகல், புடலை, முள்ளங்கி, பீன்ஸ், அரைக்கீரை என்று ஒவ்வொரு மாணவரும் அவர்கள் விதைத்ததைச் சொன்னார்கள்.

“சரி, இப்ப உங்க செடி, கொடிகள் எப்படி வளர்ந்திருக்குன்னு பாருங்க”

எல்லா செடி, கொடிகளும் மிக அழகாக வளர்ந்து வருவதைப் பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

“தருண் நீ விதைச்ச கத்தரி விதையில இருந்துதானே இந்த தக்காளிச் செடி முளைச்சது ?”

தருண் சிரித்துக்கொண்டே, “என்ன சார், என்னை சோதிச்சுப் பார்க்கணும்னுதானே இப்படிக் கேக்கறீங்க , அது எப்படி சார் கத்தரி விதையில இருந்து தக்காளிச் செடி முளைக்கும்? என்ன விதை விதைக்கறோமோ அந்த செடிதான் சார் முளைக்கும்”

“என்ன பிள்ளைகளா, தருண் சொல்வது சரிதானா?”

“ஆமாம் சார், என்ன விதை விதைக்கறோமோ அந்த விதையிலிருந்து அதற்குரிய செடிதான் முளைக்கும் சார்”

“உண்மைதான் குழந்தைகளே, எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம். அதுபோல நம்முடைய மனதில் என்ன மாதிரியான எண்ணங்களை விதைக்கிறோமோ அவைதான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். இதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது மனதில் நல்ல எண்ணங்களை வைத்திருந்தால் நல்லவற்றை அறுவடை செய்யலாம். மாறாக, கெட்ட எண்ணங்களை வைத்திருந்தால் கெட்டவையே நமக்குக் கிடைக்கும்.

அதனால் எப்பொழுதும் நாம் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும். நல்லவற்றை மட்டுமே செய்ய வேண்டும். குழந்தைகளே, இனி நீங்கள் கெட்டதை விலக்கி நல்லதை மட்டுமே உங்கள் மனதில் விதைக்க வேண்டும். சரி தானே?”

“விதைப்பதுதான் கிடைக்கும் என்பது தெரிந்ததுதான் சார். அதேபோன்று நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே நல்லவற்றைப் பெற முடியும் என்பதையும் இப்போது புரிந்துகொண்டோம் சார்” என்று ஒருசேரக் கூறினர்.

நீதி: நம் எண்ணங்கள் சிறப்பாய் இருந்தால் அதனால் உருவாகும் விளைவுகளும் மிகச் சிறப்பாய் அமையும்.

- கலாவல்லி அருள், தலைமை ஆசிரியர், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்