‘இந்து தமிழ்’- தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் விருது வழங்கும் விழா: ஐஇஎஸ்-ஐ மேம்படுத்தி ஐஏஎஸ் ஆக்குங்கள்; விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நாகை ஆட்சியர் அறிவுரை

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்

மாணவர்களின் நுண்ணறிவுத் திறன், மன வளம், சமுதாய அறிவு ஆகியவற்றை ஆசிரியர்கள் மேம்படுத்தி ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆகியவற்றின் சார்பில் நட்சத்திர ஆசிரியர் விருது வழங்கும் விழா நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.குணசேகரன் தலைமை வகித்தார்.

விழாவில், கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், டாக்டர் அப்துல் கலாம் விருது பெற்ற ஆசிரியர்கள், 2019-ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் 38 பேருக்கு சிறப்பு விருதுகளையும், கடந்த ஆண்டு பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 331 பேருக்கு விருது மற்றும் சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.

விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் பேசியதாவது:

மாணவர்களின் நுண்ணறிவுத் திறன் (Intelligence Quotient), மனவளம் (Emotional Quotient), சமுதாய அறிவு (Social Quotient) ஆகியவற்றை (IES- ஐஇஎஸ்) மேம்படுத்தினால் ஐஏஎஸ் ஆக்கலாம். படிப்பில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றுவதற்குத்தான் ஆசிரியர்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அப்போதுதான் அந்த மாணவரின் மனதில் நீங்கள் நிலைத்து நிற்பீர்கள்.

10, 20 ஆண்டுகள் கழித்து அந்த மாணவர் நல்ல நிலைக்கு வந்தவுடன் உங்களுக்கு நன்றி சொல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, இந்த விருது பெற்றதை விட மிகவும் மகிழ்ச்சியைத் தரும் என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் பேசும்போது, ‘‘ஆசிரியர்கள் அடித்தால்தான் நம் பிள்ளை நன்றாக வளரும் என்று பெற்றோர்கள் நினைத்த காலம் மாறிவிட்டது. மாணவர்களின் திறமை களைப் புரிந்துகொண்டு பக்குவமாக நீங்கள் வழிநடத்தினால் அவர் சிறந்த மாணவர் ஆவார்’’ என்றார்.

இலக்கிய, ஆன்மிக சொற்பொழி வாளர் சுமதி பேசும்போது, ‘‘மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வழிகாட்டி, அவர்களை உயர்த்துபவர்கள் ஆசிரியர்கள்’’ என்றார்.

விழாவில், தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் ஏ.சரவணவேல், இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி குழும செயலாளர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

‘மேலும் உற்சாகமாக பணியாற்றுவோம்’

நாகை தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் என்.ரவி: இதுபோன்ற விருதுகளை வழங்குவது ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்து மேலும் உற்சாகமாக பணிபுரிய வைக்கும்.

கீழ்வேளூரை அடுத்த ஆழியூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.குமரகுரு: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் எங்களைப் பாராட்டியது மிகவும் உற்சாகமாக இருந்தது.

சீர்காழியை அடுத்த நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கே.மணிமேகலை: மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதுடன் நுண்ணறிவுத் திறன், மன வளம், சமுதாய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியதை நாங்கள் பின்பற்றுவோம்.

திருமுல்லைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கே.லதா: சாதனை புரியும்போது தங்களை யாரும் பாராட்ட மாட்டார்களா என்ற ஏக்கம் ஆசிரியர்களுக்கு இருக்கும். அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

13 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்