காரில் தப்பியபோது மதுரையில் கைதான - பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சிறையில் அடைப்பு : கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் தலைமறைவு

By செய்திப்பிரிவு

பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, காரில் தப்பிச்சென்றபோது மதுரையில் நேற்று கைது செய்யப்பட்டார். குழித்துறை நீதிமன்றம் உத்தரவின்படி, அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பொன்னையா. பாதிரியாரான இவர் கடந்த 18-ம் தேதி அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது, பாரத மாதா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ், நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் குறித்து அவதூறாகவும், கடும் விமர்சனம் செய்தும் பேசினார். மேலும், திமுக பெற்ற வெற்றி குறித்தும் சர்ச்சையான கருத்தை கூறினார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து வரும் 28-ம் தேதி அருமனையில் பாஜகவினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால், தனது சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ஜார்ஜ் பொன்னையா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், கடந்த 20-ம் தேதி அவர் மீது 143, 153ஏ, 295ஏ, 505(2), 506(1), 269, 3 ஆகிய 7 பிரிவுகளில் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜார்ஜ் பொன்னையா உட்பட 2 பேரையும் கைது செய்ய, நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநவ் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. குமரி மாவட்டஎஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில் போலீஸார் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். பாதிரியார் தலைமறைவான நிலையில் நேற்று மதுரை வழியாக சென்னைக்கு காரில் தப்பிச் சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

மதுரை எஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரை அருகே கருப்பாயூரணி பகுதியில் போலீஸார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காரில் ஜார்ஜ் பொன்னையா இருப்பதை போலீஸார் அடையாளம் கண்டனர். காரை தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் வேகமாக சென்றது.

போலீஸார் கருப்பாயூரணி நான்கு வழிசாலையில் அதிவேகமாக சென்ற காரை விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது, காரில் இருந்த ஜார்ஜ் பொன்னையாவை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர், அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர் அழைத்து வரப்பட்டார். ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர்,குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு குழித்துறை நீதிமன்றம், குழித்துறை அரசுமருத்துவமனை ஆகியவற்றில் குமரி எஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நேற்று மாலை குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபனை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்