கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு - பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சன்னிதானத்தின் மேற்கூரையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோயிலில், கரோனா ஊரடங்கு என்பதால் தற்போது பக்தர்கள் பங்கேற்பின்றி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலின் பிற பகுதிகளில் நவீன கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், சன்னிதானம் மற்றும் சுவாமி விக்ரகங்கள் அமைந்துள்ள பகுதிகள் ஓட்டுக்கூரையினால் பழமை மாறாமல் அமைக்கப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் மின்வசதி இன்றி எண்ணெய் விளக்கு மற்றும் தீபங்களால் மட்டுமே ஒளிஅலங்காரம் செய்யப்படுகிறது.

நேற்று காலை 6.30 மணியளவில் கோயிலின் ஓட்டுக்கூரையில் தீப்பற்றியது. குளச்சல், தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேற்கூரையின் மீது ஏறி ஓடுகளை அகற்றி தண்ணீரை அடித்து கோயிலின் பிற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். பக்தர்களும் அவர்களுக்கு உதவினர். ஒரு மணி நேரத்துக்குள் தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சன்னதியில் இருந்த விளக்குகள், பூஜை பொருட்கள், அம்மன் அலங்கார வளைவு போன்றவை பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி விசாரணை நடத்தினார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜயகுமார் எம்பி, ஆட்சியர் மா.அரவிந்த், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

எல்.முருகன் கண்டனம்

இதற்கிடையே கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே தீ விபத்துக்கான காரணம் எனக் கூறி, பக்தர்கள் சங்கத்தினர் கோயில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விடுத்துள்ள அறிக்கையில், `ஆலய நிர்வாகத்தின் கவனக்குறைவாலேயே மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான நிர்வாகம், பூசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள தந்திரிகளை வைத்து தெய்வ ப்ரசன்னம் பார்த்து, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட பூஜைகள் குறித்து முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் முறையீடு

இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருத்தொண்டர்கள் சபையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் காணொலி வாயிலாக கோரிக்கை வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்துக்கு பிறகு நாட்டில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அனைத்து கோயில்களிலும் தீத்தடுப்பு சாதனங்களின் தற்போதைய நிலை மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

மேலும், அனைத்து கோயில்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆய்வு செய்து, கோயில்களில் உள்ள குறைபாடுகளை களையவும், அனைத்து கோயில்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு நடத்தவும், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து நடந்த பகுதியை தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தவும் அதற்கு முன்பு உரிய பரிகார பூஜைகள் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்