தேர்தல் முன்விரோதத்தால் தகராறு - அரக்கோணம் அருகே 2 இளைஞர்கள் கொலை : பதற்றமான சூழலால் காவல்துறையினர் குவிப்பு

By செய்திப்பிரிவு

அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜூனன்(26), சூர்யா(26), மதன், வல்லரசு, சவுந்தர்ராஜன் ஆகியோர் குருவ ராஜபேட்டையில் உள்ள கடை ஒன்றின் முன்பாக நேற்று முன்தினம் மாலை நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும், அவ்வழியாகச் சென்ற பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. பிறகு அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர்.

இதற்கிடையில், கவுதம்நகர்பகுதியில் இரவு 8 மணியளவில்அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது,அங்கு வந்த பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் அவர்களைசராமரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்தவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அப்போது, அர்ஜூனன் மற்றும் சூர்யா ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. மதன், வல்லரசு, சவுந்தர்ராஜன்ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்த, அர்ஜூனனுக்கு திருமணமாகி 10 நாட்களே ஆனது தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த தகவல் பரவியதால் சுற்றுவட்டார கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

வேலூர் சரக டிஐஜி காமினி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு சோகனூர் மற்றும் பெருமாள்ராஜபேட்டையில் நிறுத்தப்பட்டனர்.

கொலை சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று பகல் வரை குருவராஜபேட்டை-திருத்தணி சாலையில் மறியல் நடைபெற்றது. கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்தமதன் (37), அஜித்(24) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

20 பேரின் பட்டியல்

இதுதொடர்பாக சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘‘தேர்தலில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்ததால் இளைஞர்கள் இருவரையும் கொலை செய்துள்ளனர். இதில், தொடர்புடைய 20 பேரின் பட்டியலை போலீஸாரிடம் அளித்துள்ளோம். அனைவரையும் கைது செய்ய வேண்டும்’’ என்றனர். இதற்கிடையே, பெருமாள்ராஜபேட்டை கிராமத்தில் ராஜவேலுஎன்பவரது வயல் வெளியில் சேமித்து வைத்திருந்த நெல்லையும், அருகில் இருந்த டிராக்டரையும் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமாரிடம் கேட்டபோது, ‘‘கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை தேடி வருகிறோம். 2 பேர் பிடிபட்டுள்ளனர். மோதல் குறித்த தகவல் கிடைத்ததும் 2 கிராமங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். டிராக்டர் மற்றும் சேமிக்கப்பட்டிருந்த நெல்லை தீ வைத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தார்.

விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “தேர்தல் தோல்வி பயத்தில் சாதி, மத கும்பல் இந்த கொடூரத்தைச் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.

இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘அரக்கோணத்தில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அராஜக நடவடிக்கைகளுக்கு நாகரிக மக்கள் சமூகம் ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது.

கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு அரசு தலா ரூ.50 லட்சமும், படுகாயமடைந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சமும் நிவாரணமாக வழங்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

இந்தியா

35 mins ago

கல்வி

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்