‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரத்தை திருவண்ணாமலையில் ஜன. 29-ல் தொடங்குகிறார் ஆட்சிக்கு வந்ததும் 100 நாளில் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 29-ம் தேதி திருவண்ணாமலையில் தொடங்குகிறார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் 30 நாட்களில் 234 தொகுதிகளிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

திமுக சார்பில் ஏற்கெனவே ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட 20 முன்னணி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 23 முதல் ஜனவரி 23 வரை திமுக சார்பில் அனைத்து கிராமங்கள், வார்டுகளில் மக்கள்கிராம, வார்டு சபை கூட்டங்கள் நடந்தன. முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் மற்றும் அமைச்சர்களின் தொகுதிகளில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டங்களில் ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்நிலையில், தனது அடுத்தகட்ட பிரச்சார திட்டத்தை மறைந்த முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதற்காக நேற்று காலை 10.40 மணி அளவில்கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு, அனைத்து துறைகளிலும் ஊழல், பெரிய முதலீடுகளை ஈர்க்கமுடியாத மாநிலமாக தமிழகத்தைமாற்றியது, தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தது, வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவது, சமூக நீதியை உருக்குலைத்ததுதான் அதிமுக அரசின் சாதனைகள்.

விவசாயிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், கிராம, நகர்ப்புற மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் அதிமுகஆட்சியில் நிம்மதி இழந்துவிட்டனர். முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்களின் தொகுதிகள் உட்பட அனைத்து தொகுதிகளிலும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. மக்களின் அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படவில்லை. கரோனா பேரிடரின்போது மக்களை அதிமுக அரசு முற்றிலும் கைவிட்டுவிட்டது. கரோனா நெருக்கடியின்போது மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யாமல், தேர்தலுக்காக இப்போது ரூ.2,500 கொடுக்கிறார்கள். ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுக மக்களை கைவிடவில்லை. ‘ஒன்றிணைவோம் வா’திட்டம் மூலம் மக்களுக்கு திமுகவினர் உதவிகளை செய்தனர்.

1.25 கோடி பேர் தீர்மானம்

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரச்சாரத்தை திமுகவின் 20 முன்னணி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து 21 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள், வார்டுகளில் மக்கள் கிராம, வார்டுசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் 1.25கோடி பேர் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதிமுக மீது மக்களுக்கு உள்ள கோபத்தையும், திமுக உடனடியாக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தையும் இதன்மூலம் உணர முடிகிறது.

திமுக பிரச்சார திட்டத்தின் அடுத்தகட்டமாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறேன். மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆகிய நான் உறுதி அளிக்கிறேன்.

ஜனவரி 29-ம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கி 30 நாட்களில் 234 தொகுதிகளில் புதிய கோணத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். பட்டா வழங்குதல், வாரிசு, சாதிச் சான்றிதழ்கள், முதியோர் உதவித் தொகை போன்ற அரசுடன் தொடர்புடைய மக்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு திமுக ஆட்சியின் முதல் 100 நாளில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மக்களிடம் பதிவு எண்ணுடன்கூடிய படிவம் வழங்கப்படும். தங்களின் பிரச்சினைகளை பூர்த்தி செய்து படிவத்தை வழங்குபவருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதை வைத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் கேள்வி கேட்க முடியும். இதை செயல்படுத்த எனது பொறுப்பில் தனித் துறை உருவாக்கப்படும்.

நேரடியாக பிரச்சினைகளை கூற முடியாதவர்கள் www.stalinani.com என்ற இணையதளம், stalinani செயலி மூலமாக தங்கள் குறைகள், பிரச்சினைகளை தெரிவிக்கலாம். 91710 91710 என்ற செல்போன் எண் மூலமாகவும் பிரச்சினைகளை பதிவு செய்யலாம். மக்களின் கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

27 mins ago

சுற்றுச்சூழல்

44 mins ago

வணிகம்

34 mins ago

இந்தியா

44 mins ago

க்ரைம்

17 mins ago

சுற்றுலா

5 hours ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்