பனிச்சிறுத்தையைத் தேடி :

By ஷங்கர்

நன்மை, மகிழ்ச்சி, வாழ்வை நீட்டிக்கவும் நிலைத்திருக்கச் செய்யவும் அனைத்து உயிர்களும் போராடுகின்றன. ஆனால், அவை நிலைத்திருப்பதில்லை. நன்மை திரிந்து சங்கடம் ஆவதும், மகிழ்ச்சி குலைந்து துயரம் எழுவதும், அழகு குலைந்து அலங்கோலம் படர்வதும் வாழ்வு அடங்கி மரணம் எட்டிப் பார்ப்பதும் தான் இந்த உலகமாக இருக்கிறது.

பெரும்பாலானவர்கள் இந்த மாற்றத்தை, இந்த மாற்றம் தரும் துயரத்தை தங்கள் அளவில் தீர்த்துக் கொள்ளவே அவசர அவசரமாக குறுக்குவழிகளில் முயல்கிறோம். இந்த மாற்றத்தைப் பார்க்கவும் இந்த மாற்றமே மாறாதது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் உதவும் கல்வியாக, கருவியாக தமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை மாற்றி அந்த விடுதலைக் கல்வியை மற்றவர்களுக்குப் பகிர்பவர்கள் மிகச் சிலர்தான். கானுயிர் எழுத்தாளர், நாவலாசிரியர், ஜென் குரு என்ற அடையாளங்களைக் கொண்ட பீட்டர் மத்தீசன், 47 ஆண்டுகளுக்கு முன்னர், இமயமலைச் சரிவுகளில் அப்போது அரிதாகக் காணப்பட்ட பனிச்சிறுத்தையை ஒருமுறையாவது பார்க்க வேண்டுமென்பதற்காக மேற்கொண்ட பயணத்தின் கதை அது. பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டு மேற்கில் இருக்கும் ஜென் மடாலயங்களில் பயிற்சிகளை ஈடுபாடோடு கற்றவர் பீட்டர் மத்தீசன். ‘இதய சூத்திர’த்தின் ஆதாரமான வழிமுறையை தனது அறிவால் விளங்கிக்கொள்ள முடியாத பீட்டர் மத்தீசன், தனது மனைவியைப் புற்றுநோய்க்குப் பறிகொடுத்த இழப்பின் அனுபவத்துடன் இந்தப் பயணத்தை கானுயிரியலாளர் ஜார்ஜ் ஷாலருடன் சேர்ந்து மேற்கொண்ட பயண நூலே இந்தப் படைப்பு.

சமவெளியில் அவருக்குத் திறக்காத இதய சூத்திரத்தின் பாடத்தை இமயமலைச் சரிவில் பனிச்சிறுத்தையைத் தேடிப் போகும்போது தெரிந்துகொண்டார். பனி படர்ந்த பாறைகளின் பின்னணியில் மறைந்து திரிவதற்கான உருமறைப்புத் தோல் நிறத்தைக் கொண்ட விலங்கு பனிச்சிறுத்தை. பீட்டர் மத்தீசனின் நூலில் ஒட்டுமொத்த இமாலய மலைச் சரிவே பனிச்சிறுத்தையாக மாறும் விந்தை நிகழ்கிறது. எதிர்பாராத மாற்றத்துக்கு எப்போதும் தயாராக இல்லாது பழக்கப்பட்டிருக்கும் மனித மனத்துக்கு, எப்போதும் எங்கும் கண் முன்னால் தோன்றலாம், மறையவும் செய்யலாம் என்ற கல்வியை அளிப்பதாக பீட்டர் மத்தீசனுக்கும் வாசகனுக்கும் பனிச்சிறுத்தை இருக்கிறது. புதியதற்கு, மாற்றத்துக்கு, எதிர்பாராததற்கு நாம் ஒவ்வொரு கணமும் தயாராக இருக்கவேண்டும் என்ற கல்வியை அளிக்கும் விலங்கு பனிச் சிறுத்தை.

திபெத்தின் டோல்போ பிரதேசத்தை நோக்கி ஜார்ஜ் ஷாலருடன் பீட்டர் மத்தீசன் மேற்கொள்ளும் பயணத்தில் இரவில் மலைவாசிகளாக இருக்கும் ஷேர்பாக்களுடன் தங்கி இயற்கையோடு இயைந்து அவர்கள் வாழும் வாழ்க்கை முறையையும் நம்மிடம் இந்த நூலில் பகிர்ந்துகொள்கிறார்.

திபெத்தின் வறண்ட காற்றடிக்கும் உயர்ந்த மலைப்பகுதிகளில் நடப்பட்டிருக்கும் பிரார்த்தனைக் கொடிகளும் நிறுவியிருக்கும் ஆலய மணிகளும் தங்கள் படபடப்பினூடாக ஓசைகள் வழியாக காற்றிடம் இரந்து ஏங்கிக் கொண்டிருப்பவை. அவர்களில் ஒருவர் இறந்துபோனால், அவர்களை திறந்த இடத்தில் சடலமாக விட்டுவிடுவார்கள். இறந்தவரின் சடலம் அங்குள்ள விலங்குகளால் உண்ணப்படும். எலும்புகள் படிப்படியாக உடைந்து மண்ணோடு மண்ணாக மாவாக பறவைகளுக்கு உணவாகும். சாவும் சடலமும் படிப்படியாக மீண்டும் வாழ்வாக மாறும் அம்சத்தை பீட்டர் மத்தீசன் நேரடியாக அப்பயணத்தில் எதிர்கொள்கிறார்.

பீட்டர் மத்தீசனுக்கு சமவெளியில் விளங்காமல் இருந்த இதய சூத்திரம் கடல்மட்டத்துக்கு மேலே விளங்கத் தொடங்குகிறது. எல்லாமே அசைவில் இருக்கின்றன. பனிமலை அசைவு கொள்வதைப் பார்க்கிறார் மத்தீசன். பனிமலை உருகி சலசலக்கும் ஓடையாகிறது. நதியின் சத்தங்கள் விழும்போதும் எழும்போதும் வேறாக ஒலிக்கின்றன, காற்றைப் போல. சுற்றி வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை; அதை ஒரு மலர், எப்படி சூரியனைத் தன்னிடம் அனுமதிக்கிறதோ அப்படி வாழ்வை அனுமதிக்க வேண்டியதுதான் என்ற உணர்வு பீட்டர் மத்தீசனுக்கு ஏற்படுகிறது. மனம் திறக்கும் இந்த உணர்வை பீட்டர் மத்தீசன் அடையும்போது அவருக்கு கண்களில் ஈரம் சுரக்கிறது. அப்போது புத்தரை, சூரியன் தன் ஒளியால் நிரப்பியவராக பீட்டர் மத்தீசன் உணர்கிறார்.

“நான் குருடாக இருந்தாலும் உண்மை மிகப் பக்கத்தில் இருக்கிறது. அந்த மெய்ம்மையில்தான் நான் அமர்ந்திருக்கிறேன் - பாறைகள். இந்த கடும் பாறைகள் எனது எலும்புகளுக்கு இதய சூத்திரத்தின் பாடத்தைக் கற்பிப்பதைப்போல எனது மூளையால் கற்றுக்கொள்ள முடிந்ததேயில்லை. வடிவம் என்பது வெறுமை, அத்துடன் வெறுமை வடிவம்" என்கிறார்.

மலைகளுக்கு அர்த்தம் இல்லை. மலைகளே அர்த்தம்தான் என்கிறார். இதையெல்லாம் தனது மனத்தால் அல்ல, இதயத்தால் புரிந்துகொள்கிறேன் என்கிறார் பீட்டர் மத்தீசன்.

பீட்டர் மத்தீசன் தான் தேடிச் சென்ற பனிச்சிறுத்தையைப் பார்க்கவேயில்லை. ஆனால், அவரோடு சேர்ந்து நாம் பார்ப்பது வேறு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்