இப்படியும் கற்கலாம்! அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சி

By ப்ரதிமா

நீலப் பெருங்கடலைக் கற்பனை செய்துபார்ப்பதைவிட நேரில் காண்பது வார்த்தைகளுக்குள் அடங்காத பேரனுபவத்தைத் தரும்தானே. கல்வியும் சில நேரம் அப்படித்தான் இருக்க வேண்டும். மாணவர்கள் சொற்களை மனப்பாடம் செய்வதைவிட, அவற்றின் பொருளைப் புரிந்துகொள்வது கல்வியின் நோக்கத்தை நேர்செய்யும். காட்சிவழிக் கற்றலைப் பலரும் பரிந்துரைப்பதும் அதனால்தான்.

படிக்கிற அனைத்தையும் காட்சிப்படுத்திவிட முடியாது. ஆனால், கைக்கு எட்டுகிறவற்றைக் காட்சிப்படுத்தி, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதில் என்ன பிரச்சினை. அப்படியொரு செயலில் இறங்கியிருக்கின்றனர் வேலூர் மாவட்ட முதுகலைத் தமிழாசிரியர்கள் சிலர்.

கரோனா ஊரடங்கு, இணையவழிக் கற்றலை மாணவர்களிடையே பரவலாக்கியிருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு இது சாத்தியமா என்கிற கேள்வி ஒரு பக்கம் இருக்க, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் செயல்பட முயன்றிருக்கிறார்கள் இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள். மாணவர்களுக்குப் பாடத்தை எளிதாக விளக்குவதற்காக ‘அன்புத்தமிழ் நெஞ்சம்’ (shorturl.at/erxI5) என்கிற யூடியூப் அலைவரிசையைத் தொடங்கியிருக்கின்றனர். தமிழ்ப் பாடங்கள் சிலவற்றைச் சிறுசிறு வீடியோக்களாக வடிவமைத்து இதில் பதிவேற்றிவருகிறார்கள். பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடங்களே இவர்களது இலக்கு. செய்யுள், உரைநடை, துணைப்பாடம் என அனைத்தையும் காட்சிவழியில் புரியவைக்க முயன்றிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு, பாடப் புத்தகத்தில் இருக்கும் ஒரு சங்கப் பாடலை விளக்க, அதற்கேற்ற காட்சிகளையும் ஓவியங்களையும் படங்களையும் காட்டுகின்றனர். பாடல் குறித்த விளக்கம் முடிந்த பிறகு ஆசிரியர் ஒருவர் அந்தப் பாடலைச் சொல்கிறார். கற்றலின் கேட்டல் நன்று என்பதைச் சில காணொலிகள் உணர்த்துகின்றன. புத்தகத்தின் எந்தப் பகுதியாக இருந்தாலும் பாடத்துடன் மட்டும் நின்றுவிடாமல், அது தொடர்பான மேலதிகத் தகவல்களையும் தருவதால், மாணவர்களின் அறிவு விசாலப்படும் என்கிறார்கள்.

மாற்றுச் சிந்தனை

“மாணவர்களின் மொழிப்பற்றையும் ஆர்வத்தையும் வளர்த்தெடுக்கும் முயற்சிதான் இந்தக் காணொலிகளின் நோக்கம். வகுப்பறை என்கிற மரபு சார்ந்த கற்றலைத் தாண்டி காட்சிவழியிலான கற்றல் மாணவர்களுக்கு மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வேலூர் மாவட்ட முதுகலைத் தமிழாசிரியர்கள் சிலர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். பாடங்களைக் காணொலிகளாகப் பதிவேற்றுவதால் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் இவற்றைப் பார்க்கலாம். கைபேசி இல்லாதவர்கள்கூட, நேரம் கிடைக்கும்போது பிறரது கைபேசியில் இவற்றைப் பார்க்கலாம். தவிர, இந்தக் காணொலிகளில் மாணவர்களின் பங்களிப்பும் உண்டு என்பதால் அவர்களின் படைப்பாற்றல் மேம்படவும் இது உதவும். தற்போது, எழுத்தாளர் பூமணியின் ‘உரிமைத்தாகம்’ சிறுகதையைக் குறும்படமாக எடுத்திருக்கிறோம். விரைவில் அதையும் பதிவேற்றவிருக்கிறோம்” என்கிறார் இந்தக் காணொலிகளின் ஆக்கத்தில் ஈடுபட்டுவரும் தமிழாசிரியர் சி.பார்த்திபன். இவற்றுக்கு ஆகும் செலவை ஆசிரியர்களே பகிர்ந்துகொள்கிறார்கள்.

உரையாடலில் விரியும் பாடம்

பாடல்கள், காட்சிகள், உரையாடல், கதைசொல்லல் என ஒவ்வொரு காணொலியும் பாடத்துக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பெருமழைக்காலம்’ என்கிற பாடத்தை மாணவர் - ஆசிரியர் உரையாடலாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதில் மாணவர்களே பெருமளவு தகவல்களைச் சொல்வது அவர்களின் அறிவுத் தேடலை விசாலப்படுத்தும்.

பாடங்களுக்கு ஏற்ற காணொலி உருவாக்கம் தங்களுக்குப் புதிய அனுபவத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள் கோ.ஏழுமலை, செ.முகமது காசிம், இராச. தனஞ்செழியன், சிவசித்ரா, பழனி உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர்.

“அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் களமாகவும் இந்தக் காணொலிகள் இருக்கின்றன. இதற்காக மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும்போது, நிறைய விஷயங்களை எங்களுடன் சேர்ந்து அவர்களும் கற்கிறார்கள். பாடப்புத்தகத்தின் நீட்சியாக வெளிவரும் இதுபோன்ற காணொலிகள் மாணவர்களின் கற்றலை அடுத்தத் தளத்துக்குக் கொண்டுசெல்கின்றன” என்கிறார் முதுகலைத் தமிழாசிரியர் சீனி.தனஞ்செழியன்.

கவிஞரைத் தேடி

கவிதை உலகில் மிகப்பெரிய ஆளுமையும் இலங்கை திரிகோண மலையில் பிறந்தவருமான கவிஞர் பிரமிளுக்குப் பன்முகங்கள் உண்டு. தேர்ந்த திறனாய்வாளரான அவர், மேலை நாடுகளின் கியூபிசம், சர்ரியலிசம் போன்ற கொள்கைகளைத் தமிழில் புகுத்தியவர். “அவருக்கு வேலூர் மாவட்டத்துடன் தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்தபோது பெருமிதமாக இருந்தது. அவரது கல்லறையைத் தேடிப் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ என்கிற பிரமிளின் புகழ்பெற்ற கவிதை பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக இருக்கிறது. கவிஞர், அவரது பாடல் என்பதுடன் மட்டும் இதை நிறுத்திவிடாமல், அந்தக் கவிஞரை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமே என்கிற தேடலின் விளைவுதான் கரடிக்குடி கிராமத்தை நோக்கிய எங்களது பயணம். இந்தக் கிராமம் ஆலங்காயம் அருகில் இருக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை, கவிஞர் வளர்த்தெடுத்திருக்கிறார். அதனால், கவிஞரின் இறுதிக் காலத்தில் அவரை அந்த மருத்துவர் தன்னுடன் வைத்துப் பார்த்துக்கொண்டதாகச் சொன்னார்கள். காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்ற சிறகிலிருந்து பிரிந்த அந்த இறகு, கவிஞரின் கல்லறை மீது விழுவதாகக் காட்சிப்படுத்தினோம். இதைப் பார்க்கும் மாணவர்களுக்கு அந்தக் கவிஞரின் பிற படைப்புகளையும் தேடிப் பிடித்துப் படிக்கத் தோன்றும். கவிஞரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் தூண்டும். அந்தக் கிராமத்தில் வசிக்கிறவர்கள் பிரமிளின் கல்லறைக்குத் தவறாமல் விளக்கேற்றி வருகின்றனர். கவிஞரையோ அவரது படைப்புகள் குறித்தோ அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும், அங்கே கவிஞர் மகானாக வணங்கப்படுகிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது” என்கிறார் பார்த்திபன்.

இன்று மாணவர்களின் கற்றல் அனுபவத்தை விரிவுபடுத்த ஏராளமான காணொலிகள் அதிநவீனத் தரத்தில் உருவாக்கப்பட்டு வெளியாகின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்காக இந்தத் தமிழாசிரியர்கள் உருவாக்கியிருக்கும் காணொலிகள் தொழில்நுட்பத்திலும் காட்சிப்படுத்துதலிலும் அத்தகைய காணொலிகளுடன் போட்டிப் போடும் நோக்கத்தில் எடுக்கப்பட்டவையல்ல. கிராமப்புற மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் மொழியைக் கொண்டு சேர்ப்பதுதான் தங்களின் இலக்கு என்கிறார்கள். இந்த நோக்கமே காணொலிகளின் சிற்சில தொழில்நுட்பக் குறைபாடுகளைக்கூடப் புறந்தள்ளச் செய்கின்றன. கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் மாணவர்களின் கற்றலுக்காக முனைப்புடன் செயல்பட்டுவரும் இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களின் செயல்பாட்டை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்