கோயில் நிலம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு - தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி :

By செய்திப்பிரிவு

குயின்ஸ்லேண்ட் நிறுவனம் வசமுள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லியை அடுத்த பாப்பான் சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் தீம் பார்க் நிறுவனம், பூந்தமல்லி காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசாமி ஆகிய கோயில்களுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை குத்தகை காலம் முடிவடைந்த பிறகும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு இழப்பீடாக ரூ. 1.08 கோடி செலுத்த வேண்டும் என குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்துக்கு பெரும்புதூர் வட்டாட்சியர் கடந்த 2013-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்து இருந்தார்.

இதை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் தீம் பார்க் நிறுவனத்தை நடத்திவரும் ராஜம் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “தீம் பார்க் இயங்கி வரும் அறநிலையத் துறைக்கு சொந்தமான 21.06 ஏக்கர் அனாதீன நிலம். அதை முறையாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறோம். பெரும்புதூர் வட்டாட்சியர் இந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி இழப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டுமென நோட்டீஸ் பிறப்பித்து இருப்பது சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.

அந்த வழக்கை கடந்த அக்.7 அன்று விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், “குயின்ஸ்லேண்ட் நிறுவனம் வசம் உள்ள 21.06 ஏக்கர் கோயில் நிலங்களை 4 வாரங்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்க வேண்டும். அந்நிறுவனம் வருவாய் துறைக்கு ரூ.1.08 கோடியையும், அறநிலையத் துறைக்கு சுமார் ரூ.9.5 கோடியையும் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து குயின்ஸ் லேண்ட் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் பரேஷ் உபாத்யா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த நிலம் வருவாய் துறைக்கு சொந்தமானதா அல்லது அறநிலையத் துறைக்கு சொந்தமானதா என்பதை இறுதி செய்யாத நிலையில், அறநிலையத் துறை அந்த நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டு இருப்பது தவறானது. அந்த நிலம் முதலில் யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானித்துவிட்டு அதன்பிறகு முறையாக நோட்டீஸ் கொடுத்து அதன்பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில், “விவசாய தேவைக்காக குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும்தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டாலே அந்த நிலம் அரசுக்குத்தான் சொந்தம்” என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து குயின்ஸ் லேண்ட் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுலா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்