ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு இலவச பயிற்சி : கடலாடியில் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் ஏற்பாடு

By கி.தனபாலன்

ராணுவம், துணை ராணுவத்தில் சேருவதற்கு கடலாடியில் இளைஞர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இலவச பயிற்சி அளித்து வருகின்றனர்.

ராணுவத்தில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்ட வீரர்கள், ஓய்வுபெற்ற வீரர்கள் இணைந்து ‘சேது சீமை பட்டாளம் மற்றும் ராணுவ வீரர்கள் நலச் சங்கம்’ என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகின்றனர். இது கடலாடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 943 வீரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50 இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர இலவச பயிற்சி அளித்து வருகின்றனர். இளைஞர்களுக்கு இலவச தங்குமிடம், உடற்பயிற்சி, வகுப்புகளை நடத்துகின்றனர். ஓய்வுபெற்ற ராணுவ ஹவில்தார் மேஜர் சத்தியநாதன், தற்போது விடுமுறையில் வந்துள்ள ராணுவ வீரர்கள் முத்துராமலிங்கம், ஜெயக்குமார், முரளிதரன், சந்தனமாரி, பொம்முராஜா ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.

இது குறித்து சேது சீமை பட்டாளம் மற்றும் ராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் செயற்குழுத் தலைவர் சத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:

கரோனா காலத்தில் எங்களது அமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், மன நோயாளிகள் ஆகியோருக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினோம். மாநிலம் முழுவதும் ரத்த தானம் செய்து வருகிறோம். எட்டு குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளோம். மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருகிறோம்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை இல்லாத படித்த இளைஞர்கள் ராணுவம், துணை ராணுவம், தமிழக காவல் துறை ஆகியவற்றில் சேருவதற்கு பயிற்சி அளிக்கிறோம். இதை அறிந்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இதில் இணைந்தனர். இவர்களுக்கு அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை உடற்பயிற்சிகள், ராணுவ ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் பயிற்சி அளிக்கிறோம்.

மேலும் வாரத்துக்கு 2 நாட்கள் துறை ரீதியான ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தி, மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மன அமைதிக்காக யோகா, மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் முதல் புதுக்கோட்டையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடக்க உள்ளது. அதில் இங்கு பயிற்சி பெறும் பெரும்பாலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது.

கடலாடியில் மைதானம் இன்றி சாலையோரங்களில் பயிற்சி அளித்து வருகிறோம். இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே உடற்பயிற்சிக் கூடத்துடன் நிரந்தர விளையாட்டு மைதானம் மற்றும் எங்கள் அமைப்புக்கு கட்டிடம் கட்ட இடம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்