பணத்தை இரட்டிப்பாக்கி கொடுப்பதாக கூறி ஆன்லைனில் மோசடி : சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை

By செய்திப்பிரிவு

ஆன்லைன் வழியாக முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு மஜித் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ் அஹ்மத் (27). இவர், முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தை இணைய தளத்தில் பார்த்துள்ளார். அதில், குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடர்புகொண்டு விசாரித்த போது, நிறுவனத்தின் பணம் இரட்டிப்பு திட்டம் குறித்து விளக்கி யுள்ளனர். மேலும், முதலீட்டு தொகைக்கு ஏற்ப இரட்டிப்பு தொகை கிடைக்கும் என்பதுடன், இதற்காக செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழியாக பணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ரியாஸ் அஹ்மத் அந்த தனியார் நிறுவனத்தின் செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அவருக்குரிய கணக்கையும் தொடங்கியுள்ளார். குறைந்தபட்சம் ரூ.100 செலுத்த வேண்டும் என்பதால் முதற்கட்டமாக ரூ.500 தொகையை கூகுள் பே வழியாக செலுத்தியுள்ளார். அவருக்கு உடனடியாக ரூ.16 லாபத் தொகையுடன் சேர்த்து மொத்தம் ரூ.516 கிடைத்தது. அந்த பணத்தை ரியாஸ் அஹ்மத் எடுத்துக்கொண்டார்.

அதிக பணம் கிடைத்த ஆசையில் ரியாஸ் அஹ்மத் கடந்த மாதம் 20-ம் தேதி மூன்று தவணைகளில் ரூ.55 ஆயிரம் பணத்தை செலுத்தியுள்ளார். அவருக்கு 10 நாட்கள் கழித்து ரூ.84 ஆயிரம் தொகை சேர்ந்துள்ளதாக அந்த செல்போன் செயலி கணக்கில் தெரியவந்தது. அந்த தொகையை அவர் திரும்பப்பெற முயன்றபோது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

இதுகுறித்து, தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘மின்னணு பணப் பரிமாற்றத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்பதால் கூடுதல் தொகையை செலுத்தினால் அந்தப் பிரச்சினை சரியாகிவிடும்’ என தெரிவித்துள்ளனர். அதை நம்பிய ரியாஸ் தன்னுடைய உறவினர் மற்றும் நண்பர் ஒருவர் மூலமாக ரூ.40 ஆயிரம் தொகையை செலுத்தியுள்ளார். அந்தப் பணத்துக்கும் முதலீட்டு பணத்துக்கும் கூடுதல் தொகை கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரியாஸ் அஹமத் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றும் பேச முடியவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து பார்த்தபோது அந்த நிறுவனம் போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக ரியாஸ் அஹ்மது நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்பேரில் வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் அபர்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

30 mins ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்