கரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு - மக்கள் ஒத்துழைக்காவிட்டால் அரசு நோக்கம் நிறைவேறாது : பொதுமக்களுக்கு தருமபுரி ஆட்சியர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடைமுறைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தராவிட்டால் அரசின் நோக்கம் நிறைவேறாது என தருமபுரியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியது:

மே 1-ம் தேதி முதல் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்.

இதுதவிர, மே 6-ம் தேதி காலை 4 மணி முதல் 20-ம் தேதி காலை 4 மணி வரை அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் தருமபுரி மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படும். அதன்படி, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் ஆகியவை 50 சதவீதம் பணியாளர் களுடன் இயங்கும். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பயணியர் ரயில்கள், வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள், வணிக வளாகங்களில் இயங்கும் கடைகள், காய்கறி கடைகள் போன்றவை இயங்க அனுமதி இல்லை. தனியாக செயல்படும் மளிகை கடை, காய்கறி கடை போன்றவை குளிர்சாதன வசதி இல்லாமல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு நாள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி, பகல் 12 முதல் 3 மணி, மாலை 6 முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும்.

இங்கெல்லாம் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை. திரையரங்குகள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி இல்லை. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. பால் விநியோகம், தினசரி பத்திரிகைகள் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி போன்ற மருத்துவத் துறை பணிகள், சரக்கு வாகனம், எரிபொருள் வாகனங்கள் ஆகியவை இரவுநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கின்போதும் அனுமதிக்கப்படுகிறது.

கிடங்குகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது, சேமித்து வைப்பது போன்ற பணிகளை இரவு நேர ஊரடங்கின்போதும், முழு ஊரடங்கின்போதும் மேற்கொள்ளலாம். முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கை 50-க்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஞாயிறு முழு ஊரடங்கின்போது செயல்பட அனுமதி இல்லாத தொழில் நிறுவனங்களில் தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அரசு இந்த நடைமுறைகளை அறிவித்திருந்தாலும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவில்லை எனில் அரசின் நோக்கம் நிறைவேறாது. எனவே, பொதுமக்களும், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவள்ளி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சீனிவாச சேகர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன், நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி, வட்டாரப்போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்