ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - ஒரே நாளில் 996 பேருக்கு கரோனா பாதிப்பு : ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் தவிப்பு

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 996 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 23 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கிருந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு வந்து செல்வோர்களால் கரோனா பாதிப்பு பெருகி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 648 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாநகராட்சிப்பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் 70 சதவீதத்தை கடந்துள்ளனர். இதனால் மாநகராட்சி பகுதிகளில் நோய் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின்பேரில் கரோனா தொற்று அதிகரித்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு, தடுப்புகள் அமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டில் மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதேபோல, கரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாநகராட்சி உதவி ஆணையர் பாலு, சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இது மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் வருவோர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேலூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் கரோனா தொற்று தீவிரமடைந்தவர்களுக்கு மட்டுமே படுக்கையுடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது. கரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டுகள் நிரம்பியுள்ளதால் அங்கு புதிய கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் அதிக நோயாளிகள் வருவதால் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவிக் கின்றனர்.

இந்நிலையை போக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத் துவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலை மையில் நடைபெற்றது. இதில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) தாமரைக்கண்ணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் மற்றும் அரசு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் கரோனா வுக்கு எதிராக நடந்து வரும் போரில் என்னென்ன செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு எவ்வளவு ? தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்? தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு உள்ளது ? கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் தர சிகிச்சை அளிப்பதற்கான வழி முறைகள் யாவை ? கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு மருத்துவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய ஆட்சியர் சண்முகசுந்தரம் அதற்கான தீர்வுகளை கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கோவாக்சின் தடுப்பூசிகளும், 1,000 கோவிஷீல்டுகளும் வரப் பெற்றுள்ளதாகவும், அதை விரைவாக பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 222 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 231 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 2.63 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2,745 பேர் அரசு மருத்துவமனை மற்றும்கரோனா சிறப்பு சிகிச்சை மையங் களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகள் 4 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் செந்தாமரைகண்ணன் அங்கு நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, அரசு மருத்துவ மனையில் கரோனா வார்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் உள்ளிட்டவைகளை தலைமை மருத்துவர் நிவேதாவிடம் கேட்டறிந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 126 பேர் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அரசு மருத்துவ மனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலை கட்டுப்படுத்தமாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நேற்றிரவு ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. இதில், மருத்துவர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், ஊரக வளர்ச்சித்துறை யினர் பலர் கலந்து கொண்ட னர்.

இதில் கரோனா பரிசோதை னையை அதிகரிப்பது, மருத்துவ மனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்து வது, தடுப்பூசி முகாம் நடத்தி தகுதியுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது, கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்து, அதற்கான முடிவுகள் வெளியாகும் வரை அவர்களை வெளியே வர தடை விதிப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

3 mins ago

க்ரைம்

9 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்