திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றாததால் சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு விதிக்கப்பட்ட ரூ.8 லட்சம் அபராதம் ரத்து செய்ய மறுப்பு

By செய்திப்பிரிவு

திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாகப் பின்பற்றாததால் சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படுத்தப்படவில்லை. குப்பைகள் அகற்றப்படுவதில்லை என மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இதுதொடர்பாக ஆய்வு செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கொண்ட வல்லுநர்கள் குழுவையும் அமைத்திருந்தது. அக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், "சிட்லபாக்கத்தில் தினமும் 11 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அதில் 80 சதவீதம் வீடு வீடாக சேகரிக்கப்படுகிறது.

சேகரிக்கப்படும் குப்பை, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரிக்கப்படுகிறது. அந்த இடம் கடந்த 30 ஆண்டுகளாக குப்பை கொட்டும் வளாகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்று இடம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டுள்ளது. அவரது அறிவுறுத்தல்படி, ஜூன் மாதத்துக்குள் இடத்தை தேர்வு செய்து, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் வழங்க உள்ளார். திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாத சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரூராட்சி சார்பில், ‘பேரூராட்சியில் போதிய நிதி இல்லாததால், பேரூராட்சிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது. பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவின்படி, திடக்கழிவு மேலாண்மை விதிகளைக் கடைபிடிக்காத உள்ளாட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் தென்மண்டல அமர்வு தலையிட முடியாது. பேரூராட்சி நிர்வாகத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக அமல்படுத்த தேவையான இடம் போன்ற உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

48 mins ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்