தென்பெண்ணை நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜன.30-ல் நந்திமலையில் இருந்து விழிப்புணர்வு பாத யாத்திரை தொடக்கம் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் ஏற்பாடு

By செய்திப்பிரிவு

தென்பெண்ணை நதியைப் பாதுகாக்க வலியுறுத்தி ஜன.30-ம் தேதி நந்திமலையிலிருந்து விழிப்புணர்வு பாத யாத்திரையை தொடங்கி நடத்த அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அகில பாரதீய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமானந்தா சுவாமிகள் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் வேதம் முரளி, சன்னியாசிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் கோராக்ஷனந்தா சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களிடம் ராமானந்தா சுவாமிகள் கூறியது:

தைப்பூச விழாவுக்கு விடுமுறை அளித்த தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறோம். தமிழகத்தில் தொடர் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு, பொங்கல் விழாவை சரிவர கொண்டாட முடியவில்லை. எனவே, வரும் தைப்பூசத்தன்று விவசாயிகள் அனைவரும், அவரவர் இல்லத்தில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும்.

கிராமங்களில் போதிய வருமானம் இல்லாமல் உள்ள கோயில்களுக்கு, அரசே இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழகத்தில் தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் கயிலாய யாத்திரை செல்பவர்களுக்கு நிதி உதவியை விரைந்து வழங்க வேண்டும்.

கும்பகோணத்தில் பிப்.26-ம் தேதி மாசிமக விழா, ஆரத்தி பெருவிழா ஆகியவற்றை வழக்கம்போல வெகுசிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நதிகளைப் பாதுகாக்க வேண்டியும், நீர்நிலைகளைப் போற்றி வணங்க வேண்டியும் ஏற்கெனவே அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி நதி பாதுகாப்பு யாத்திரை, தாமிரபரணி, வைகை நதிகளில் விழிப்புணர்வு யாத்திரைகள் மற்றும் புஷ்கரங்கள் நடத்தப்பட்டு, அந்த நதிகளில் இன்றளவும் நீர் குறையாமல் இருந்துகொண்டிருக்கிறது.

அதேபோல, தென்பெண்ணை நதிக்காக முதற்கட்டமாக விழிப்புணர்வு பாத யாத்திரையும், அதைத் தொடர்ந்து புஷ்கர விழாவும் நடத்தப்பட இருக்கின்றன.

கர்நாடக மாநிலம் நந்திமலையில் இருந்து தொடங்கும் தென்பெண்ணை நதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக 420 கி.மீட்டர் தொலைவுக்கு பாய்கிறது. அந்த வழியாகவே, ஜன.30-ம் தேதி நந்திமலையில் தொடங்கும் நதி பாதுகாப்பு யாத்திரை பிப்.24-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் முடிவடைகிறது. யாத்திரைக்குப் பின்னர் புஷ்கர விழா நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்