அணை, ஆறுகளில் விதிகளை மீறி - மணல் அள்ளுவதை தடுக்க சிசிடிவி கேமரா : நல்லகண்ணு தொடர்ந்த வழக்கில் அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By செய்திப்பிரிவு

`அணை மற்றும் ஆறுகளில் தூர் வாரும் இடங்களில் விதிகளை மீறி மணல் அள்ளுவதை தடுக்க, சிசிடிவி கேமராக்களை நிறுவி கண்காணிக்க வேண்டும்’ என்று, தமிழக அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கடந்த 2015-ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

வைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி என்ற பெயரில் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டு வருகிறது. அங்கு தூர் வாரும் பணி அறிவியல் முறையில் மேற்கொள்ளப்படாததால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அறிவியல் முறையில் தூர் வார அரசுக்கு உத்தரவிட வேண்டும். இங்கு தூர் வாரும் பணியை கண்காணிக்க, உள்ளூர் பிரதிநிதிகள் இடம்பெற்ற குழு ஒன்றை அமைக்க வேண்டும். விதிகளை மீறி தூர் வாருவதைத் தடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.

இதை விசாரித்த அமர்வு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக விஞ்ஞானி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைத்தது. அக்குழு தாக்கல் செய்தஆய்வறிக்கையில், “வைகுண்டம் அணையின் கொள்ளளவை 141.26 மில்லியன் கனஅடியாக உயர்த்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 255.60 ஏக்கர் பரப்பளவு வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் முறையாகவே தூர்வாரப்பட்டு வருகிறது. விதிமீறல்கள் ஏதும் இல்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

அணைகள், ஏரிகள் மற்றும்ஆறுகளில் விதிகளை மீறி மணல் அள்ளுவதை அனுமதிக்கக்கூடாது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே தூர் வார வேண்டும்.

தமிழக அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (2006) விதிகளுக்கு உட்பட்டு மணல் அள்ள அனுமதிக்கலாம். தூர்வாருதல் தொடர்பாக கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நெறிமுறைகளை தற்கால தொழில்நுட்ப முறைகளின்படி உருவாக்க வேண்டும்.

தூர் வாரும் பணியில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். விதிகளை மீறி மணல் அள்ளும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாருவதை முறைப்படுத்த மாவட்டஅளவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையில் புவியியல் துறை, பொதுப்பணித்துறை, நீர்ப்பசனத்துறை அதிகாரிகளைக் கொண்ட நிரந்தர மதிப்பீட்டு வல்லுநர் குழுக்களை அமைக்க வேண்டும்.

தூர் வாரும் இடங்களில் சிசிடிவிகேமராக்களை நிறுவி அறிவியல்முறையில் தூர் வாரப்படுகிறதா, விதிகளை மீறி மணல் அள்ளப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்